கன்னியாகுமரி கடலில் முழ்கி 8 பேர் உயிரிழப்பு காரணம் என்ன? யாரும் போகாதீங்க நிலைமை சரி இல்ல!

Kanyakumari,

Kanyakumari,

குமரி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என்பதால் கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்த நிலையில், கடந்த இரு தினங்களில் கடல் அலையில் சிக்கி குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் சுற்றுலா பயனைகளிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதீத கடல் சீற்றத்துக்கான ரெட் அலர்ட் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்னும் நீடிப்பதால், கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென் தமிழகம் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் கடல் அலைகளில் மாற்றம் இருக்கும் என்று பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்தியத் தேசிய மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. கடல் சீற்றத்துடன் பெரிய அலைகள் எழுப்பும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் மற்றும் கடலோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

குறிப்பாக, குமரி கடற்கரையில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் அபாயகரமான பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கன்னியாகுமரியில் நேற்று தேங்காய் பட்டணம் கோடிமுனை, குளச்சல், பொழிக்கரை போன்ற பகுதிகளில் கடல் சீற்றம் காணப்பட்டது.

இந்நிலையில், நாகர்கோவில் அடுத்த லெமூர் கடற்கரைக்கு ஆயிரங்கால் பொழிமுகம் பகுதியில் சுற்றுலா வந்த திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ – மாணவிகள் 5 பேர் கடல் அலையில் சிக்கி மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவிலில் நடைபெற்ற திருமணத்திற்காக வந்த மாணவர்கள், திருமணத்திற்குப் பின் லெமூர் கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அங்கு, 8 மாணவர்கள் கடலில் இறங்கிக் குளித்த நிலையில் அவர்களை எதிர்பாராத விதமாக ராட்ச அலை இழுத்துச் சென்றுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள், மீனவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்ற நிலையில், 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

பின்னர், மற்றவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேலும் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிரவின் சாம்,காயத்திரி, சாருகவி, வெங்கடேஷ் மற்றும் சர்வ தர்சித் ஆகிய 5 பேரின் உடலும் தற்போது கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என்பதால் கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்று ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “மாணவர்கள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர், அப்போது அங்கிருந்த காவலர் மாணவர்களை எச்சரித்தார். இருப்பினும், மாணவர்கள் அலட்சியமாக விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர், எதிர்பாராத விதமாகப் பெரிய அலை வந்து மாணவர்களை இழுத்துச் சென்றனர்.

மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை காப்பாற்றச் சென்ற நிலையில், இருவர் உயிரிழந்து விட்டனர். சம்பவம் நடந்ததும் தீயணைப்புத் துறை மற்றும் ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் வருவதற்குக் காலதாமதமானது. அவர்கள் சீக்கிரம் வந்திருந்தால் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம்” என்றார்.

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டணத்தில் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் இருவரை ராட்சத அலை இழுத்துச் சென்றது அங்கு இருந்த மீனவர்கள் ஒடி சென்று தந்தை பிரேமதாஸ் என்பவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், கடலில் மாயமான அவரது 7 வயது மகள் ஆதிஷாவை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்று சிறுமி ஆதிஷாவை மீனவர்கள் இன்று சடலமாக மீட்டனர்.

இதை போல் சென்னையில் இருந்து 16 பேர் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை கடற்கரை கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். அவர்களில், மனோஜ்குமார் மற்றும் விசூஸ் ஆகிய இருவர் கடல் கரை பகுதியில் நின்று கொண்டு இருந்த வேளையில் இருவரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. இருவரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டு உள்ளனர்.

Exit mobile version