ஜம்மு – காஷ்மீரில், உலகின் மிக உயரமான, செனாப் ரயில் பாலம் திறக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகள் குறித்து சுவாரசியமான தகவல்கள் வெளியாகி ஜம்மு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி பல முக்கிய திட்டங்களைத் திறந்து வைத்தார். அதில் முதன்மையானது மற்றும் முக்கியமானது செனாப் பாலமாகும். உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான இது, இந்தியப் பொறியியல் துறையின் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த பாலத்தைத் திறந்து வைத்தார்.
பஹல்கம் தாக்குதலுக்கு பிறகு பிரதமர் மோடி காஷ்மீருக்குச் சென்று. பாலத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, பாலத்தின் மீது நமது மூவர்ணக்கொடியுடன் சிறிது தூரம் நடந்தார். இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரைப் பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமிக்க முயலும் நிலையில், அதற்கு அனுப்பப்பட்ட ஒரு மெசேஜாகவே இது பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம். நில அதிர்வு மற்றும் பலத்த சூறாவளிக் காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.சுமார் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரெயில் மற்றும் வளைவு பாலமாகும். இது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரமும், பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரமும் கொண்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8 அளவு வரை நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் கொண்டது
செனாப் நதியின் ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படாமலும் கட்டுமானம் முடிக்கப்பட்டிருக்கிறது. சாலை இணைப்பு எதுவும் இல்லாத காரணத்தால், மிகப்பெரிய இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் அந்த இடத்திற்கு கொண்டு செல்வதில் மற்றொரு முக்கிய சவாலாக இருந்தது. பாலத்திற்காக 28,660 மெட்ரிக் டன் எக்கு பயன்படுத்தப்பட்டு, 26 கிலோ மீட்டர் நீளமுள்ள போக்குவரத்துக்கான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிக்கலான கட்டடங்களையோ அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களையோ 3டி வடிவத்தில் வடிவமைக்கும் டெக்லா எனும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
120 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியதாக செனாப் ரயில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் பயணிக்க முடியும் திறனுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 8 ரிக்டர் அளவுகோல் வரையிலான பூகம்பங்களை தாங்கும்.பாலத்திற்கு எந்த சேதமும் ஆகாது. 40 டன் டிஎன்டி வெடிப்புகளை தாங்கும் சக்தியும் கொண்டது. இந்தியாவின் மிகவும் சிக்கலான மற்றும் தனிமையான புவியியில் பகுதியில் கட்டப்பட்டுள்ள செனாப் ரயில் பாலம் பொறியியல் துறையில் ஓர் அற்புதமாக பார்க்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது ரெயில்கள் செல்லும் போது சாகச பயணம் போல இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பாலம் பயன்பாட்டுக்கு வருவதால் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செனாப் ரயில் பாலத்தின் வெற்றிகரமான கட்டுமானத்திற்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர், பேராசிரியை மாதவி லதா.பெங்களூரில் உள்ள, ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் பேராசிரியையான இவர், செனாப் ரயில் பால திட்டத்தில், புவி தொழில்நுட்ப ஆலோசகராக, 17 ஆண்டுகள் பணிபுரிந்தார்.பாலத்தின் ஒப்பந்ததாரரான, ஆப்கான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய அவர், நிலப்பரப்பால் ஏற்படும் தடைகளை மையமாகக் கொண்டு கட்டமைப்பின் திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்டார்.
செனாப் ரயில் பாலத்தை கட்டுவதற்கு சவாலான நிலப்பரப்பு, வானிலை, தொலைதுார இருப்பிடம் ஆகியவை சவாலாக இருந்தன.ஆனால், பேராசிரியை மாதவி லதா தலைமையிலான குழுவினர், அனைத்து தடைகளையும் கடக்க சிறந்த அணுகுமுறைகளை தயாராக வைத்திருந்தனர். அயராது உழைத்த இந்த குழுவினர், பாறைகளின் தன்மைகள், வழித்தடங்களை கண்டறிந்தனர்.
யார் இந்த மாதவி லதா?பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியையான மாதவி லதா, 1992ல், ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலையில் சிவில் இன்ஜினியரிங்கில் பி.டெக்., பட்டம் பெற்றார். 2000ல், ஐ.ஐ.டி., -சென்னையில் புவி தொழில்நுட்ப பொறியியலில் அவர் முனைவர் பட்டம் பெற்றார். பல்வேறு விருதுகளை பெற்ற அவருக்கு, 2021ல், இந்திய புவி தொழில்நுட்ப சங்கத்தால், சிறந்த பெண் புவி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டது. 2022ல், இந்தியாவின் ஸ்டீம் நிறுவனத்தில், சிறந்த 75 பெண்களில் ஒருவராக இடம்பிடித்தார்.
பாலம் கட்ட உதவிய குதிரை, கழுதைகள்: செனாப் பாலத்தை கட்டிய அப்கான்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியபோது பெரும் சவால்களை சந்தித்தோம். பொறியாளர், தொழிலாளர்களை குதிரைகள், கழுதைகள் மூலம் அழைத்து சென்றோம். கட்டுமான உபகரணங்கள், கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லவும் குதிரைகள், கழுதைகளை பயன்படுத்தினோம்.
இதன்மூலம் முதல்கட்டமாக கட்டுமான பணியிடத்துக்கு செல்ல தற்காலிகமாக சாலைகளை அமைத்தோம். அதன் பிறகே கட்டுமான பணிகள் வேகம் பெற்றன. எங்களோடு இணைந்து உழைத்த குதிரைகள், கழுதைகளுக்கும் நன்றிக்கடன் செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வாறு அப்கான்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அப்கான்ஸ் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறும்போது, “செனாப் ரயில் பாலம், பொறியியலின் அதிசயம் ஆகும். கட்டுமான துறையில் இந்தியாவால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த பாலம் உதாரணம் ஆகும். உலகின் மிக உயரமான கிரேன்கள், அதிநவீன கட்டுமான கருவிகளை பாலம் கட்டும் பணிக்கு பயன்படுத்துகிறோம்’’ என்றார்.
அப்கான்ஸ் நிறுவன துணை நிர்வாக இயக்குநர் கிரிதர் ராஜகோபாலான் கூறும்போது, “காற்றின் அழுத்தம், பாலத்தின் பாரத்தை தாங்கும் வகையில் வளைவு வடிவில் இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ரயில்வே கட்டுமானத்தில் இந்த தொழில்நுட்பம் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.