பொன்முடி அமைச்சர் ஆவாரா? ட்விஸ்ட் வைத்த ஆளுநர்.. முடிவு இனி அவர்கள் கையில் தான்….

RNRAVI

RNRAVI

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு மற்றும் திருக்கோவிலூர் தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரை விடுவித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் இருந்தது.

இவ்வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து, பொன்முடி தனது திருக்கோவிலூர் சட்டமன்றத் உறுப்பினர், அமைச்சர் பதவிகளை இழந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையையும், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவால் மீண்டும் பொன்முடி அமைச்சராவது உறுதியானது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைக்கப் பெற்றதை அடுத்து திருக்கோவிலூர் எம்.எல்.ஏவாக பொன்முடி தொடர்வார் என்றும், தொகுதி காலி என்கிற அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாகவும் சட்டமன்ற செயலகம் அறிவித்தது. இதனையடுத்து, பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

ஆனால், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர், மறுநாள் டெல்லி சென்றார். பதவியேற்பை தாமதப்படுத்தவே ஆளுநர் டெல்லி சென்றுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகின. இந்த நிலையில் தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், பொன்முடி பதவி ஏற்பதில் சிக்கல்கள் உண்டாகின.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொன்முடி அமைச்சராக பதவியேற்க முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், “தமிழ்நாட்டில் புதிய அமைச்சராக ஒருவர் பதவியேற்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் என்று தவறான தகவல் இடம்பெற்றுவிட்டது. ஆனால், இடைத் தேர்தலுக்கான அறிவிக்கையில் விளவங்கோடு மட்டும்தான் உள்ளது. திருக்கோவிலூருக்கு இடைத் தேர்தல் நடைபெறாது. பொன்முடி தற்போது சட்டமன்ற உறுப்பினராகவே தொடருகிறார்” என்றும் சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

Exit mobile version