பள்ளியை சூறையாடிய போராட்டக்காரர்கள்-கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் இப்பள்ளியில், பிளஸ்-2 மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதி உள்ளது. மர்ம சாவு இந்த விடுதியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17) தங்கியிருந்து பிளஸ்-2 படித்து வந்தார்.

இதே பள்ளியில் ஸ்ரீமதியின் தம்பி சந்தோஷ் (10) 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தினசரி பள்ளி பஸ்சில் வீ்ட்டுக்கு சென்று படித்து வந்தான். என்ஜினீயர், டாக்டர் என சாதிக்கும் கனவுடன் இருந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ந் தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார்.

இதில் பெரும் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பள்ளி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறினாலும், மாணவியின் பெற்றோர் தரப்பில் சந்தேகம் எழுந்தது. இது தொடர்பாக அவர்கள் சின்னசேலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், மாணவி சாவு குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

தொடர்ந்து மறுநாள் (14-ந்தேதி), மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து, பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் முயன்றனர். ஆனால் மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர். மேலும் மாணவியின் சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், மாணவியின் சாவுக்கு நீதி வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவியின் பெற்றோர், உறவினர்கள், மாணவர் அமைப்பினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கடந்த 4 நாட்களாக பள்ளி முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 5-வது நாளாக நீடிப்பு இதற்கிடையே மாணவியின் சாவுக்கு நீதி வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று இவர்களது போராட்டம் 5-வது நாளாக நீடித்தது.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளி முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். மாணவர் அமைப்பினர் போராட்டம் இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் மாணவர் அமைப்பினர், இளைஞர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பள்ளி நுழைவுவாயில் முன்பு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் சாவுக்கு நீதி கேட்டும், சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டுகள் கள்ளக்குறிச்சி செல்வக்குமார், விழுப்புரம் ஸ்ரீநாதா ஆகியோர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. போலீசார் திணறல் இதையடுத்து போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுப்புகள் வைத்து தடுக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இருப்பினும் அவர்கள் போலீசாரை தள்ளி விட்டு அத்துமீறி பள்ளிக்குள் அதிரடியாக நுழைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். ஆனால் போலீசாரின் எண்ணிக்கையைவிட போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். 55 போலீசார் காயம் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்கள், கண்ணாடி பாட்டில்கள், செருப்புகளை வீசியும், உருட்டுக்கட்டைகளை கொண்டும் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் தடியடி நடத்தியும், கற்களை வீசியும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கினர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இதனால் பள்ளி வளாகமே போர்க்களமாக மாறியது. எங்கு பார்த்தாலும் கற்கள், செருப்புகள் சிதறிக்கிடந்தன. மேலும் கல்வீச்சு தாக்குதலில் டி.ஐ.ஜி. பாண்டியன், கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார், சேலம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உள்பட 55 போலீசார் காயமடைந்தனர்.

17 பஸ்களுக்கு தீ வைப்பு இதற்கிடையே போராட்டக்காரர்கள் பள்ளியின் வகுப்பறைகள், அலுவலக அறைக்குள் புகுந்து ஒவ்வொரு வகுப்பறையாக சென்று, கண்ணாடிகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். மேலும் வகுப்பறை மற்றும் அலுவலக அறையில் இருந்த மேஜை, நாற்காலிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பொருட்களையும் போட்டு உடைத்து சூறையாடி தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் சான்றிதழ்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் தீ வைத்து கொளுத்தி நாசமாக்கினர். இதனால் ஒவ்வொரு வகுப்பறையிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் ஆத்திரம் தீராத போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 17 பள்ளி பஸ்கள், வாகனங்கள் மற்றும் போலீசாரின் வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். கலவர பூமி இதற்கிடையே பள்ளிக்கு வெளியே திரண்டிருந்த போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கி அதற்கும் தீ வைத்தனர். மேலும் சிலர் பள்ளியில் இருந்த பொருட்களை எடுத்து வந்து சாலையில் போட்டும் தீ வைத்து கொளுத்தினர்.

மேலும் போலீஸ்காரர்களின் 4 வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இதனால் பள்ளி வளாகமே தீக்கிரையானது மட்டுமல்லாமல், கலவர பூமியாக மாறியது. மேலும் சினிமாவையே மிஞ்சும் வகையில் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருந்தது. கண்ணீர் புகைகுண்டு வீச்சு இருப்பினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும் வகையில், அவர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாததால், வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர்.

அதன் பிறகும் அசராத போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். தடியடி இதையடுத்து வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி தலைமையில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரக்காரர்களை தடியடி நடத்தியும், தடுப்புகள் அமைத்தும் விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் வஜ்ரா வாகனங்களுடன் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் குவிப்பு தொடர்ந்து மாலை 3 மணிக்கு பள்ளி வளாகத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். மேலும் அங்கு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் சேலம்- சென்னை, சென்னை- சேலம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பி விடப்பட்டன. பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.. மாணவியின் தாய் பேட்டி இந்த நிலையில் மாணவியின் தாய் செல்வி கண்ணீர் மல்க, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டும் என நான் நினைக்கவில்லை. அமைதியான முறையில் நீதி கிடைக்க வேண்டும். போராட்டம் இவ்வளவு வன்முறையாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அனைவரும் எனது மகளை அவர்களது சகோதரியாக நினைத்து தான் போராட சென்றனர். ஆனால் எப்படி வன்முறையாக மாறியது என்று தெரியவில்லை. கடந்த 4 நாட்களாக அமைதியாகதான் இருந்தோம். இன்று மக்கள் கொந்தளித்து விட்டார்கள். ஆனால் எப்படி வன்முறை நடந்தது என்று தெரியாது. யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version