கடனை வசூல் செய்ய ஆபாச படங்களாக சித்தரித்து அட்டூழியம் செய்த 221 மோசடி கடன் செயலிகள் நீக்கம்.

கடனை வசூல் செய்ய ஆபாச படங்களாக சித்தரித்து அட்டூழியம் செய்த கந்து வட்டி கும்பலின் 221 மொபைல் போன் செயலிகளை மாநில சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர்.கடன் பெற செயலிகளை பதிவிறக்கம் செய்ய துவங்கும்போதே மொபைல் போனில் உள்ள தொடர்பு எண்கள் புகைப்படங்கள் ‘பான் ஆதார்’ அட்டை உள்ளிட்ட விபரங்களை மர்ம நபர்கள் பெற்று விடுவர். இவற்றை தர ஒப்புதல் அளித்தால் மட்டுமே அந்த செயலிகளின் வாயிலாக கடன் பெற முடியும்.

குறிப்பிட்ட தேதிக்குள் வட்டியுடன் கடனை செலுத்த வேண்டும். தவறினால் நிலுவை தொகைக்கும் சேர்த்து வட்டி கட்ட வேண்டும். கடனை செலுத்த மறுத்தால் ஏற்கனவே போனில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் பரப்புவர்.
கடன் வாங்கியவர்களின் உறவினர்கள் நண்பர்களுக்கு மிகவும் கேவலமாக தகவல் அனுப்புவர். இப்படி மன உளைச்சலை ஏற்படுத்தி கடனை வசூலிப்பர்.

அதேபோல இந்த ஆண்டு ஜன. 1ல் இருந்து மே 3ம் தேதி வரை சமூக வலைதளமான ‘பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் யு டியூப்’ ஆகியவற்றில் பதிவு செய்த 40 பதிவுகளையும் நீக்கியுள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் கவர்னர் ரவி மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதுாறு பரப்பும் 386 வீடியோக்களை நீக்க அந்தந்த நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் ‘தகவல் தொழில்நுட்ப திருத்த சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். இனியும் பொது மக்கள் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம்.’சமூக வலைதளத்தில் விஷமத்தனமான வீடியோக்களை பதிவேற்ற வேண்டாம். மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Exit mobile version