திருப்பூரில், நேற்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது:
தமிழகத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது. ஹிந்து மக்களின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க., அரசு, ஹிந்து முன்னணயினர் மீது தமிழகம் முழுதும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது.
செய்யாறு விழாவில், சனாதனத்தை விமர்சித்த உதயநிதியை கண்டித்து பேசிய, ஹிந்து முன்னணி மாநில செயலர் மணலி மனோகர், ஆரணியில் வேலுார் கோட்டத் தலைவர் மகேஷ் ஆகியோரை, பயங்கரவாதிகளை கைது செய்வது போல போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை பார்க்கையில், தமிழகத்தில் கருத்து சுதந்திரம் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.இதே தமிழகத்தில் பிரதமர் மோடியை தரக்குறைவாக விமர்சித்தவர்கள் மீது புகார் அளித்தும் போலீசார் கண்டு கொள்ளவில்லை.ஹிந்து கடவுள்கள், ஹிந்து மத நம்பிக்கையை புண்படுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்தாலும், நடவடிக்கை இல்லை.
ஆனால், விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாத ஹிந்து விரோத தி.மு.க., அரசு, ஜனநாயகத்தை புறந்தள்ளி அடக்குமுறையை ஏவி, ஹிந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்வது கண்டனத்துக்கு உரியது.தமிழகத்தில் எமர்ஜென்ஸி நிலை அமல்படுத்தப்பட்டதைப் போன்ற அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. கைதான நிர்வாகிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தென்காசி, திருச்செந்துார், கும்பகோணம் என பல இடங்களில், நிர்வாகிகள் மீது வழக்குப்பதிந்து, இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளனர். இப்பிரச்னை குறித்து, ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















