நாடு முழுவதிலும் உரம் எளிதாகக் கிடைக்கும் ஏற்பாடு உள்ளது: சதானந்த கவுடா

நடப்பு கரீஃப் பருவத்தில் உரங்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய இரசாயன மற்றும் உரங்களுக்கான அமைச்சர் திரு. டி.வி. சதானந்த கவுடா கூறினார். இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்கென உர உற்பத்தியாளர்கள் மற்றும் மாநில அரசுகளுடன் மத்திய அரசு நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகிறது எனவும் திரு. கவுடா கூறினார்.

மேலும் இவற்றின் தேவைக்கு ஏற்ப வழங்கலை உறுதிப்படுத்தும் வகையில் இறக்குமதிக்கான சுழற்சிக் காலமும் சுருக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அமைச்சர் கூறினார்.

தமது மாநிலத்தில் யூரியாவின் தேவை குறித்துப் பேசுவதற்காக தெலுங்கானா மாநில விவசாயத்துறை அமைச்சர் திரு. சிங்கிரெட்டி நிரஞ்சன் ரெட்டி திரு. கவுடாவை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். வழக்கமானதை விட சிறப்பாக உள்ள பருவமழை மற்றும் இந்த கரீஃப் பருவத்தில் பயிரிடும் நிலப்பரப்பு அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவாக கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தமது மாநிலத்தில் உரத்திற்கான தேவையும் நுகர்வும் அதிகரித்துள்ளது எனவும் அவர் மேலும் கூறினார். தெலுங்கானா மாநிலத்திற்குப் போதுமான அளவிற்கு யூரியா வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் மத்திய அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

தற்போது நாடு முழுவதிலும் உரங்கள் கிடைப்பதற்கான சூழல் வசதியானதாகவே உள்ளது என்றும், மாநிலங்கள் ஏற்கனவே போதுமான அளவிற்குக் கையிருப்பு வைத்துள்ள போதிலும், தற்போது தொடர்ந்து நடைபெற்று வரும் விதைப்பு முயற்சிகளின் காரணமாக உரங்கள் கூடுதலாக தேவைப்படுமெனில், அதற்கான வழங்கல் ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்படும் என்றும் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் யூரியா கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.

******

Exit mobile version