அமித்ஷா அரசியல் ஆட்டம் ஆரம்பம் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே இலக்கு !

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் இரு தேசிய செயற்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உள்ளிட்ட அக்கட்சியின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஹைதராபாத் வந்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, ‘நாட்டின் அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் சகாப்தமாகத் தான் இருக்கும். இந்த காலகட்டத்தில் இந்தியா விஷ்வகுருவாக உருவெடுக்கும். 2002 குஜராத் கலவர வழக்கில் அனைத்து விசாரணையும் முறையாக நடைபெற்று நீதிமன்றமே பிரதமர் மோடியை குற்றமற்றவர் என தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் மோடி அரசியல் சட்டத்தை முறையாக மதித்தார்.ஆனால், ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய போது அவர் தனது கட்சியினர் மூலம் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டார். காங்கிரஸ் ஒரு குடும்ப கட்சியாகவே உள்ளது. புதிய தலைவரை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் தவித்து வருகிறது.வேறு யாரேனும் கட்சியின் தலைவராக வந்தால், கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்காது என்ற பயத்தில் ராகுல் காந்தி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி சாதி, மத வெறி அரசியலை கையிலெடுத்து செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வகுப்புவாதம், பயங்கரவாதம் தலைத்தூக்கி வருகிறது. தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. இந்த குடும்ப ஆட்சிக்கு பாஜக விரைவில் முடிவு கட்டும். அதேபோல், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும்.’ இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Exit mobile version