ஊழல் குறியீட்டில் தமிழகம் தான் முதலிடம்! அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு

‘இந்தியாவில் எந்தவொரு ஊழல் குறியீட்டிலும் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. பணம் கொடுக்காமல் தமிழகத்தில் எந்த வேலையும் நடைபெறாது,” என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

தி.மு.க., ஆட்சியில் காவல்துறை, பா.ஜ., எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு, பா.ஜ., – தி.மு.க., இடையிலான சித்தாந்த மோதல் குறித்து, அண்ணாமலை, ‘தினமலர் ‘ நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:போலீஸ் துறை ஆட்சி மாற்றத்தின் போது, முதல்வர் தன் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ற ஓர் அணியை உருவாக்குவது வழக்கமானதே. தமிழகத்தைப் பொறுத்தவரை 100 சதவீதத்தையும் மாற்றுவதுதான், நிர்வாகச் சீர்கேட்டுக்கு காரணமாக அமைகிறது.அதிகாரிகள் ஒருவித அச்சத்துடனே இருக்கின்றனர்.

தற்போது கூட கனிமவளத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு, 20 கோடி ரூபாய் அபராதம் விதித்த எஸ்.பி., கலெக்டரை மாற்றியுள்ளனர்.பா.ஜ.,வை தி.மு.க., எதிரியாக நினைக்கிறது; பா.ஜ.வினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர். ‘டிரான்ஸ்பர்’ செய்துவிடுவோம் என, காவல்துறையை மிரட்டும் அரசாக தி.மு.க., அரசு இருக்கிறது.

எதிர்க்கட்சிகளைக் கட்டுப்படுத்த காவல் துறை பயன்படுத்தப்படுகிறது. இது தமிழகத்தின் சாபக்கேடு. காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்து, ஆதாயம் தேடுவது தி.மு.க.,வின் ஸ்டைலாக உள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகளை அனுசரித்துச் சென்றால்தான், ஸ்டேஷனை நடத்த முடியும் என்ற சூழல் நிலவுகிறது. தமிழக காவல்துறை சிறப்பான ஒன்றாக இருந்தாலும், கீழ்மட்டத்தில் லஞ்சம் அதிகமாக உள்ளது.


பணிச்சுமையும் அவர்களுக்கு அதிகம். இன்ஸ்பெக்டரை 16-18 மணி நேரம் வேலை வாங்கினால் அவர்களின் மன அழுத்தம் அதிகமாகவே இருக்கும். மாநகரப்பகுதிகளில் ஷிப்ட் முறை கொண்டு வரப்பட வேண்டும். 8 மணி நேரம் மட்டுமே பணி இருக்க வேண்டும். விடுப்புகளை உறுதி செய்ய வேண்டும். நிறைய பயிற்சி அளிக்கலாம். படிக்க வாய்ப்பளிக்கலாம். பணிச்சுமை அதிகரிப்பதால், அவர்கள் தங்களின் கோபத்தை, சாதாரண மக்கள் மீது காட்டுகிறார்கள்.

இந்தியாவில் எந்தவொரு ஊழல் குறியீட்டிலும் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. பணம் கொடுக்காமல் தமிழகத்தில் எந்த வேலையும் நடைபெறாது. குறிப்பாக, தி.மு.க., ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் ஒரு காரியத்தையும் சாதிக்க முடியாது. ஒரு நிறுவனம் இருந்தால், சதுர அடிக்கு இவ்வளவு கொடு என கேட்டு வாங்குகின்றனர்.அரசியல்வாதிகள் வாங்குவதால், அதிகாரிகளும் வாங்குகின்றனர்.போக்குவரத்துத் துறை, வணிகவரித்துறை என, எங்கு திரும்பினாலும் லஞ்சம். காவல்துறை இதில் ஓர் அங்கம். நேர்மையான ஒரு மனிதன், தமிழகத்தில் நிறுவனம் தொடங்கி, யாருக்கும் வேலை கொடுத்து விட முடியாது.

அன்னுாரில் தொழிற்பேட்டைக்கு 3,845 ஏக்கர் தேவை. அது பவானி ஆறு பாயக்கூடிய விளைநிலம். அத்திக்கடவு – -அவிநாசி திட்டத்தால் பாசன வசதி பெறும் நிலம். தமிழகத்துக்கு தொழிற்சாலைகள் தேவை. அதை தரிசு நிலத்தில் அமைக்கலாமே. இஸ்ரேல், சவுதியில் நீரில்லா இடத்தில் தொழிற்பேட்டை அமைக்கிறார்கள்.

தொழில் மயமாதலை பா.ஜ., அதிகம் ஆதரிக்கும் கட்சி. ஆனால், இங்கு விளைநிலத்தில் தொழிற்பேட்டை தேவையில்லை. அங்கிருக்கும் தண்ணீரைக் குறிவைத்து செயல்படுகின்றனர். சில கார்ப்பரேட்களிடம் 20 சதவீதம் கமிஷன் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்க, தி.மு.க., கட்சி நடத்துகிறது. ஆகவே, எதிர்க்கிறோம்.


பா.ஜ.,வுக்கும் தி.மு.க.,வுக்கும் சித்தாந்த மோதல் நடக்கிறது. பொய்யான சித்தாந்தத்தை விதைத்து, பரப்பி, இதுதான் தமிழகத்துக்கு வேண்டும் என தி.மு.க., சொல்கிறது. அதற்கு மாற்று அரசியலை நாங்கள் முன் வைக்கிறோம்.தமிழ் சித்தாந்தமும், பா.ஜ.,வின் சித்தாந்தமும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றன. மிக வேகமாக வளர்கிறோம். எங்கள் இலக்கில் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு இருக்கிறோம்.’ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் விவரங்கள் அண்ணாமலையின் கையில் இருக்கின்றன. பிரமோஷனோ, பென்ஷனோ கிடைக்காது’ என, கராத்தே தியாகராஜன் கூறியது, பொதுவான கருத்து அல்ல. சில அதிகாரிகள், அரசின் ஏஜென்டாக செயல்படாதீர்கள் என்பதுதான் அவர் சொன்னது.


மேகதாதோ, முல்லை பெரியாறோ, தமிழக மக்களின் நலனுக்காக தமிழக பா.ஜ., செயல்படும். இதுதொடர்பான போராட்டங்கள் அந்த மாநிலங்களுக்கு எதிரானவை அல்ல. தேசியக் கட்சி என்ற முறையில், அந்தந்த மாநிலங்களில், அம்மக்களின் நலனுக்காகவும், நாடுதழுவிய அளவில், தேச நலனுக்காகவும் பா.ஜ., போராடும்.

இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

Exit mobile version