RSS அலுவலகத்தில் குண்டு வெடிப்பு,கேரளாவில் பயங்கரம்….

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வெடித்ததால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கண்ணுார் மாவட்டம் பையனுாரில் ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் அமைப்பின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டடத்தில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் கட்டடத்தின் கதவுகள், நாற்காலிகள் சேதம் அடைந்தன. ஜன்னல் கண்ணாடிகள்உடைந்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அலுவலகத்தை படம் பிடித்து சென்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் யாரும் பாதிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.குண்டு வெடிப்புக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தெரிவித்துள்ளன.


இது குறித்து கண்ணுார் மாவட்ட பா.ஜ., தலைவர்ஹரிதாசன் கூறியதாவது:நாங்கள் தங்கம் கடத்தல் விவகாரத்தை வெளியே கொண்டு வந்தோம். கடத்தலில் கேரள முதல்வருக்கு தொடர்பு உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஸ்வப்னா தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை பெரிதானதால் ஆளுங் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மக்களை திசை திருப்ப, அக்கட்சி பல உத்திகளை கையாண்டு வருகிறது.

தற்போது ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டுள்ளதும் அதில் ஒன்று. இதில் ஆளுங் கட்சியினருக்கு தொடர்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version