தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் மாவட்ட இளைஞரணி துணைதலைவர் கைது.

கோவையில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை தலைவரை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை குனியமுத்தூர் கே.ஜி.கே. வீதியை சேர்ந்தவர் செல்வ குமார். இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.  அவருக்கு துணையாக அவரது மனைவி தனலட்சுமி கடையை கவனித்து வருகிறார். இந்த நிலையில் தனலட்சுமி கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் கடையில் பொருட்கள் வாங்குவது போன்று நடித்து தனலட்சுமி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். 

இது குறித்த புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் தனலட்சுமியிடம் நகையை பறித்துவிட்டு 2 பேர் பைக்கில் தப்பி செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்ததில், கோவை கரும்புக்கடையை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு சொந்தமானது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அந்த சிறுவன் கோவை கரும்புக்கடை ஆசாத் நகரை சேர்ந்த பைசல் ரகுமான் (வயது 30) என்பவருடன் சேர்ந்து தனலட்சுமி கழுத்தில் கிடந்த நகையை பறித்தது தெரியவந்தது.கோவை மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி துணைத்தலைவரான பைசல் ரகுமான், அந்த சிறுவனுடன் சேர்ந்து கோவைப் புதூர், வெள்ளலூர், போத்தனூர், சூலூர் உள்பட 10 இடங்களில் பெண்களிடம் நகை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்ற குற்றச்செயல்கள் புரிபவர்கள் கட்சியின் முக்கிய பதவி வழங்கிய தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை முறித்து மூத்த நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Exit mobile version