தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி பத்திரப்பதிவுக்கு திடீர் தடைவிதித்த விடியல் அரசு..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார். அதன்விபரம் வருமாறு;

கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் சீரான வளர்ச்சிக்கு தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வராகிய தங்களின் சீரிய தலைமையின் கீழ், தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையிலும், தமிழ்நாடு பத்திர பதிவுத்துறையிலும் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு புதிய சட்ட திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்காக தமிழக அரசுக்கும், தங்களுக்கும், மேற்கண்ட இரு துறைகளின் அமைச்சர் பெருமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எங்கள் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில், உளமார்ந்த பாராட்டுக்களையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேவேளையில் டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ துறைகளில் முறையான மனை பிரிவுக்கான அங்கீகாரம் பெற்றும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகளில் சாலைகள் உட்பட பொது பயன்பாடுகளை தான பத்திரம் மூலம் ஒப்படைத்தும், முறையான கட்டணம் செலுத்தி இறுதி ஒப்புதல் பெற்றும் விற்பனை செய்து வந்த வீட்டுமனைகள் மற்றும் முறையான கட்டிட திட்ட அனுமதி பெற்ற தனி வீடுகள் அனைத்தையும்,தற்போது திடீரென தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை தனது சுற்றறிக்கை கடித எண்: 14441/C1/2018, நாள்: 16/12/2021 இன் மூலம் பொத்தம் பொதுவாக பத்திர பதிவு செய்வதற்கு தடை விதித்திருக்கிறது.

அதே நேரம் 500 சதுர மீட்டருக்கு கீழ் உள்ள மனைகளையும் எட்டு யூனிட்டுக்கு கீழ் உள்ள வீடுகளையும், முழுவதுமாக முடிவு பெற்ற திட்டங்களையும் (TNRERA) வில் பதிவு செய்ய விலக்களித்து இருக்கிறது.பதிவுத்துறையின் இந்த திடீர் செயலுக்கு மேற்கண்ட FAIRA கூட்டமைப்பின் சார்பில் மிகுந்த எங்களின் மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழக அரசுக்கு பெருமளவில் வருவாயை ஈட்டித்தரும் பதிவுத்துறையில், இப்படி திடீரென அங்கீகாரம் பெற்ற மனைகளையும், வீடுகளையும் பதிவு செய்வதற்கு தடை விதித்து இருப்பதன் மூலம் பலகோடி ரூபாய் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும். மேலும் அபிவிருத்தியாளர்களுக்கும் பெரிய அளவில் வணிகம் பாதிப்பதோடு, பொருளாதார சிக்கலும், பல வகையிலும் பிரச்சனையும், பேராபத்தும் ஏற்படும்.

இப்படி DTCP/CMDA அங்கீகாரம் பெற்ற மனையை பதிவு செய்ய திடீர் தடை உத்தரவு பிறப்பித்து இருப்பதன் மூலம் அங்கீகாரம் பெற்ற வீட்டு மனை பிரிவுகளில் தனி மனையை முன்பதிவு செய்து பொதுமக்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அபிவிருத்தியாளர்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் பொதுமக்களுக்கு பதிவு செய்து கொடுக்க இயலாத சூழ்நிலை இந்த தடை உத்தரவின் மூலம் ஏற்பட்டுள்ளது.

அதே நேரம் நிலத்தின் உரிமையாளருக்கு முழு தொகையையும் செலுத்தி விட்ட பிறகும் இந்த DTCP/CMDA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளை அபிவிருத்தியாளர்கள் தங்கள் பெயரில் தற்போது பதிவு செய்து கொள்ள இயலாத சூழ்நிலையும், இதனால் பல பிரச்சனைகளும், பல சிக்கல்களும் பொதுமக்களுக்கும் அபிவிருத்தியாளருக்கும் இந்த தடை உத்தரவு மூலம் ஏற்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவை பயன்படுத்தி இன்னும் கூடுதலாக சில சார் பதிவாளர்கள் ஒரு படி மேலே போய் மேற்கண்ட அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளில் கடந்த காலங்களில் (RERA நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே) மனைகளையும், வீடுகளையும் வாங்கிய பொதுமக்கள் RERA வில் பதிவு செய்து உத்தரவு பெறாமல், அதனை மறுபடியும் விற்பனை செய்து மறு கிரைய ஆவணம் பதிவு செய்யவும், வங்கிகளில் கடன் பெறவும் பதிவு செய்ய முடியாது என மறுக்கின்றனர். பதிவுத்துறையின் இந்த செயலால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் பொதுமக்கள் வாங்கிய அங்கீகாரம் பெற்ற வீட்டுமனையை அவர்களே தனியாக கூட RERA வில் பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை.

அதேநேரம் டிடிசிபி அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை பிரிவில் ஒரு சில பகுதி மனைகளை மாத்திரம் வாங்கியவர்கள், உள்ளாட்சியில் அதற்குண்டான முறையான கட்டணம் செலுத்தி உத்தரவு பெற்ற மனைகளை, அவர்களே தனியாக கூட RERA வில் பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை.

மேலும் நூறு மனைகள் கொண்ட ஒரு வீட்டு மனைப் பிரிவில், தற்போது ஒரே ஒரு மனை தான் விற்பனை செய்யாமல் மீதி இருக்கிறது என்றால், மேற்கண்ட நூறு மனைகளையும் RERA வில் பதிவு செய்து, அதற்கான கட்டணத்தையும், ஏற்கனவே DTCP/CMDA அங்கீகாரம் பெற்ற பிறகு விற்பனை செய்த மனைகளுக்கான தண்டத்தொகையையும் மனை ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் வீதம் செலுத்தி உத்தரவு பெற்றால் மட்டும்தான், தற்போது விற்பனை செய்யாமல் மீதி இருக்கும் அந்த ஒரே ஒரு மனையை கூட பதிவு செய்ய முடியும்.

நிலத்தை ஒருவரும், DTCP/CMDA அங்கீகாரத்தை ஒருவரும், அபிவிருத்தியை ஒருவரும், விற்பனையை ஒருவரும் கூட்டாக மேற்கொண்டு இருந்தாலும் RERA வில் எவர் பெயரில் நிலம் இருக்கிறதோ அவர்தான் பதிவு செய்யமுடியும். பகுதி மனையை பொது அதிகாரம் பெற்றவர், அபிவிருத்தியாளர் அல்லது ஒப்பந்ததாரர் உட்பட வேறு எவரும் பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை.

அதேபோன்று ஏற்கனவே விற்பனை செய்த மனைகளுக்கான தண்ட தொகையையும் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் செலுத்தி, அவர் RERA வில் பதிவு செய்து உத்தரவு பெற்ற பிறகுதான் ஏற்கனவே DTCP/CMDA மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் கூட தங்கள் மனையை விற்க அல்லது வங்கியில் கடன் பெற இயலும் என்ற நிலை தற்போது இந்த தடை உத்தரவு மூலம் ஏற்பட்டுள்ளது.

மேலும் RERA வில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் சாதாரண, சாமானிய கட்டுனர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்கள் பதிவு செய்ய முடியாதபடி மிகக் கடுமையாக உள்ளது.கூராய்வு என்ற பெயரில் குறைபாடுள்ள ஆவணங்களை கேட்டு அலைக்கழிக்கப்படுவதோடு ஒவ்வொரு முறையும் அந்தக் கோப்பு எண்ணை முடித்து வைத்து, திருப்பி அனுப்புகின்றனர். மீண்டும் அந்த குறைபாடுள்ள ஆவணங்களை (LOGIN) உள்நுழைவு ஏற்றம் செய்ய சொல்கின்றனர். மேலும் புதிய கோப்பு எண் தந்து முதலிலிருந்து துவங்க சொல்கின்றனர்.

அதுமட்டுமல்ல தற்பொழுது சென்னையில் செயல்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாடு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் சேர்த்து தான் செயல்படுகிறது. தற்போது DTCP அலுவலகம் மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் செயல்படும்போதே மனை மற்றும் கட்டட திட்ட அனுமதி அங்கீகாரம் பெற பல மாதங்கள் மற்றும் பல வருடங்கள் ஆகிறது.மேலும் தற்பொழுது மனை மற்றும் கட்டிட திட்ட அனுமதி பெறுகின்ற அபிவிருத்தியாளர்களில் குறைந்த பட்சம் 10 முதல் 20 சதவிகிதம் பேர் கூட RERA வில் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்காத சூழ்நிலையில், அதற்கே TNRERA உத்தரவு வழங்குவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாத காலம் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் போலியான திட்ட அனுமதி பெற்ற வீட்டுமனை பிரிவுக்கு கூட RERA பதிவு செய்து அனுமதி அளித்திருக்கிறது.

தற்பொழுது டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைகளை பதிவு செய்வதற்கு திடீர் தடை விதித்த பிறகு ஆயிரம் கணக்கான திட்டங்கள் RERA வில் பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில், குறைந்த அலுவலர்களை கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மேற்கண்ட விண்ணப்பங்களின் மீது எப்படி விரைவாக உத்தரவு பிறப்பிக்க முடியும்.மேலும் இந்த தடை உத்தரவின் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களுக்கும் கால நேர வீண்விரயமும் இதன் மூலம் ஏற்படுவதோடு, மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளும், பலவகையில் பிரச்சினைகளும் ஏற்படும்.

இதுவரை கடன் பெற்று அபிவிருத்தி செய்த கட்டுனர்களும், அபிவிருத்தியாளர்களும் மனைகளை வாங்கிய பொதுமக்களும் இந்த தடை உத்தரவின் மூலம் இனி பெரிய அளவில் பாதிக்கப்படுவர்.

மேலும் வரன்முறை சட்டம் 2017, அரசாணை எண் 78 இன் கீழ் அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப் பிரிவுகளுக்கு, வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்து பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு, தற்பொழுது பதிவுக்கு ஏற்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் இறுதியாக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட விதிகளில் முடிவு பெற்ற திட்டங்களுக்கு பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே, அதாவது 20/10/2016- க்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை, மனை வரன்முறை சட்டம் 2017 இன் கீழ் அங்கீகாரம் பெற்ற வீட்டு மனைப் பிரிவுகளுக்கு மாத்திரம் குறைந்தபட்சம் உடனடியாக விலக்கு அளிப்பதற்கு தமிழக அரசு கொள்கை அளவிலான முடிவினை போர்க்கால அடிப்படையில் தகுந்த நடவடிக்கையை எடுத்து, விரைந்து மேற்கொள்ள வேண்டும் என விடியல் அரசின் நாயகன், தமிழக மக்களின் நலனை எண்ணி, நாளும் செயலாற்றும் மாண்புமிகு தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வர் அவர்களை FAIRA சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம்.

SOURCE :- HINDU SAKTHI NEWS

Exit mobile version