திமுக சிறுபான்மையினருக்கு பாதுகாவலான கட்சி அல்ல பா.ஜ.க என்பது சாத்தானின் கட்சி அல்ல பாதிரியார் அதிரடி !

தி.மு.க சிறுபான்மையினருக்கு பாதுகாவலான கட்சி அல்ல பா.ஜ.க என்பது சாத்தானின் கட்சி அல்ல. பாதிரியார் அதிரடி

தூத்துக்குடி: தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட பொன் விழாவுக்கு தமிழக முதல்வரை அழைத்தால், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்து விடுவோம் என கிறிஸ்தவ பாதிரியார் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் பாதிரியாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அமலதாஸ். இவர், தற்போது தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள பாதிரியார்கள் ஓய்வு இல்லத்தில் தங்கியுள்ளார். இவர்பேசிய ஒரு வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில் பாதிரியார் அமலதாஸ் பேசியுள்ளதாவது: மதுக்கடைகளை மூடுவோம் என தேர்தல் நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால், மூடவில்லை, மாறாக கூடுதல் மதுக்கடைகளை திறக்கின்றனர். எனவே, அவர் பொறுப்பான முதல்வராக இல்லை. புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் கோரிக்கை விடுத்தன. ஆனால் மதுக்கடைகளை மூட முதல்வர் மறுத்துவிட்டார். அதுமட்டுமல்ல கிறிஸ்தவ சிறுபான்மை பள்ளிகளுக்கான சலுகைகளை படிப்படியாக முதல்வர் குறைத்து வருகிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மறைமாவட்ட பொன் விழாவுக்கு அவரை அழைப்பதாக அறிகிறோம். அவ்வாறு முதல்வர் ஸ்டாலினை அழைத்தால் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர் போன்ற அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி சார்புடையவர்களாக செயல்படுவதாக பொருளாகிவிடும்.

எனவே, முதல்வர் ஸ்டாலினைஅழைத்து ஆன்மிக காரியத்தைபடுகுழியில் தள்ள வேண்டாம்.அப்படித்தான் நடத்துவோம் என உறுதியாக இருந்தால், கிறிஸ்தவர்களும் உங்களுக்கு தலையாட்டி பொம்மைகளாக இருந்தால், அப்படிப்பட்ட கிறிஸ்தவர்களை நம்புவதை விட பாஜகவை நம்புவதே மேல் என முடிவு செய்து, குருக்களிலே கொள்கை உறுதிபடைத்த நாங்கள் பொன் விழா நேரத்திலேயே அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைவோம் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பாதிரியார் பேசி உள்ளார்.

பா.ஜ.க சாத்தானின் கட்சி அல்ல:
இதுகுறித்து, இந்து தமிழ் நாளிதழிடம், பாதிரியார் அமலதாஸ் கூறியது: மறைமாவட்ட நூற்றாண்டு விழா என்பது ஆன்மிக விழா. அதை அரசியலாக்க வேண்டாம் என மறைமாவட்ட நிர்வாகத்தை எச்சரிக்கும் வகையில் தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். பாஜக என்பது சாத்தானின் கட்சியும் அல்ல. திமுக சிறுபான்மையினருக்கு பாதுகாவலான கட்சியும் அல்ல.

குருக்கள் அனைவரும் எல்லா கட்சியினருக்கும் பொதுவானவர்களே. ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்சியினரை மட்டும் விழாவுக்கு அழைப்பது ஏற்புடையது அல்ல. இது பற்றி மறைமாவட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே பாஜகவில் இணைவோம் என தெரிவித்தேன் என்றார்.

Exit mobile version