விடியல் பரிதாபங்கள் ! நகைக்கடன் தள்ளுபடி: 13.47 லட்சம் பேர் ஏமாற்றம்!

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், 13.47 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி சலுகை கிடைக்க உள்ளது. அரசின் கடும் நிபந்தனைகளால் 35.38 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடைக்காது என்பதால், சலுகையை எதிர்பார்த்து காத்திருந்த பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு வங்கிகளும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும், குறைந்த வட்டியில் தங்க நகைகள் அடமானத்தில் கடன் வழங்குகின்றன. அந்த நகை கடன்களை பெற பலரும் முன்னுரிமை தருகின்றனர். தி.மு.க., வாக்குறுதி

சட்டசபை தேர்தலின் போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்’ என தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி, ஆட்சி அமைத்ததும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தரவிட்டார். இதற்கிடையில், அரசின் நகைக்கடன் தள்ளுபடி சலுகையை பெற, ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர், கூட்டுறவு வங்கிகளின் வெவ்வேறு கிளைகளில் கடன் பெற்றுள்ளனர். மற்ற பலர் போலி நகைகளை அடகு வைத்தும் கடன் பெற்றுள்ளனர் என புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டு, நிலுவையில் உள்ள அனைத்து நகைக் கடன்களையும் ஆய்வு செய்ய கூட்டுறவு துறை உத்தரவிட்டது. அதன்படி, ஒரு மாவட்ட அதிகாரிகள், வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அத்துடன் நகைக்கடன் தள்ளுபடி சலுகை பெறும் பயனாளிகளை தேர்வு செய்ய, பல்வேறு நிபந்தனைகளையும் அரசு விதித்தது. அதன்படி, பயிர்க்கடன் தள்ளுபடி சலுகை பெற்றவர்கள், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர், கூட்டுறவு சங்க ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நகைக் கடன்களுக்கு தள்ளுபடி சலுகை கிடையாது என தெரிவிக்கப்பட்டது.

ஆய்வுப் பணி

மேலும், ரேஷன் கார்டு, ‘ஆதார்’ கார்டு எண்ணை வழங்காதவர்கள்; தவறாக வழங்கியவர்கள் என மேலும் பலரும் தள்ளுபடி சலுகை பெற தகுதி இல்லாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவர் என்று கூறப்பட்டது. இந்நிலையில், நான்கு மாதங்களாக கூட்டுறவு வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த நகைக் கடன் ஆய்வு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 5 சவரனுக்கு உட்பட்டு, 1.25 லட்சம் ரூபாய் வரை நகைக் கடன் பெற்ற, 48.85 லட்சம் நகைக் கடன்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு உள்ளன. அந்த கடன்களின் கீழ் வழங்கப்பட்ட தொகை 18 ஆயிரம் கோடி ரூபாய். அதனடிப்படையில்,
தள்ளுபடி சலுகை பெறும் பயனாளிகளின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், அரசு விதித்த கடும் நிபந்தனைகளால், 35.38 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி சலுகை கிடைக்காது என தெரிய வந்துள்ளது. சலுகை பெறும் பட்டியலில் 13.47 லட்சம் பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பெற்றுள்ள கடன் தொகை 4,816 கோடி ரூபாய்.பயனாளிகளின் பட்டியலை அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பியுள்ள கூட்டுறவு துறை, கடன் தள்ளுபடிக்கு அவர்கள் தகுதி உடையவர்களா என்பதை மீண்டும் இறுதி செய்து, நாளைக்குள் அந்த விபரங்களை அனுப்பும்படி, மண்டல இணைப் பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

நோட்டீஸ் வினியோகம் மேலும், கடன் தள்ளுபடிக்கான தகுதி பெறுவோர் பட்டியலுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் இறுதி ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகே, நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்களின் நகை வழங்கப்படும். நகை கடன் தள்ளுபடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு, மாவட்ட வாரியாக வரும் சனிக்கிழமை அல்லது திங்கள் முதல், நகை தள்ளுபடி சான்று மற்றும் நகைகள் திரும்ப வழங்கப்பட உள்ளன. இதற்காக நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து, கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் கூறியதாவது:தேர்தல் பிரசாரத்தின் போது, நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தான் வாக்குறுதி அளிக்கப்பட்டது. எந்த நிபந்தனையையும் தெரிவிக்கவில்லை. தற்போது கடும் நிபந்தனைகள் விதித்து, பெரும்பாலானோருக்கு நகை கடன் தள்ளுபடி சலுகை வழங்காமல் செய்வது ஏமாற்றம் அளிக்கிறது.முறைகேடு செய்தவர்களுக்கு தள்ளுபடி சலுகை வழங்க தேவையில்லை. மற்ற அனைவருக்கும் தள்ளுபடி சலுகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Exit mobile version