அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை மஹிந்திரா நிறுவனம் உள்ளட்ட இந்திய நிறுவனங்கள் அதிரடி..!

‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்ந்து, நான்காண்டு பணி முடிக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக, மகிந்த்ரா, ஆர்.பி.ஜி., உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

நம் ராணுவத்தில் ‘அக்னி வீரர்’கள் என்ற பெயரில் புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. ‘அக்னிபத்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு 60 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்கப்பட உள்ளனர். நான்கு ஆண்டுக்குப் பின், இவர்களில் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர். நான்கு ஆண்டுக்குப் பின், இவர்களுக்கு துணை ராணுவம் உட்பட பல துறைகளில், 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள இளைஞர்கள் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நான்கு ஆண்டு பணி முடிந்ததும், தங்களுக்கு வேறு வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காத சூழல் ஏற்படும் என்றும், அதனால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், அவர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, வட மாநிலங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல தனியார் நிறுவனங்கள், அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளன. கட்டுமான உபகரணம் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மகிந்த்ரா குரூப் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா, இது குறித்து சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நடக்கும் வன்முறை, வருத்தம் அளிக்கிறது. கடந்தாண்டு இந்த திட்டம் முன் மொழியப்பட்டபோது கூறியதை, மீண்டும் இப்போது கூற விரும்புகிறேன்.அக்னி வீரர்களின் திறமை மற்றும் ஒழுக்கம் ஆகியவை, அவர்களை வேலைவாய்ப்புகளுக்கு சிறந்தவர்களாக மாற்றும். ராணுவப் பணியை முடித்த திறமையான, பயிற்சி பெற்ற அக்னி வீரர்களை பணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பை, மகிந்த்ரா குழுமம் வரவேற்கிறது.

கார்ப்பரேட் துறையில் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. தலைமைப் பண்பு, குழுமப் பணி மற்றும் உடற்பயிற்சி போன்ற சிறந்த பயிற்சி பெற்ற அக்னி வீரர்கள், தொழில் துறை சந்தைக்கு தேவையான தீர்வுகளை வழங்குவர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பயோகான் லிட்., நிறுவன தலைவர் கிரண் மஜும்தார் கூறுகையில், ”எதிர்காலத்தில் தொழில் துறையில் அக்னி வீரர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்,” என்றார்.

ஆர்.பி.ஜி., என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹர்ஸ் கோயங்கா கூறுகையில், ”எங்கள் நிறுவனமும் அக்னி வீரர்களை வரவேற்கிறது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. மற்ற நிறுவனங்களும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதி ஏற்க வேண்டும்,” என்றார்.

அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தின் இணை மேலாண்மை இயக்குனர் சங்கீதா ரெட்டி, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுதர்சன் வேணு ஆகியோரும் இது போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ‘அக்னி வீரர்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பர்’ என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முறையான அறிவிப்பு


‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியில் சேருவது தொடர்பான முறையான அறிவிக்கையை, இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. இதன்படி, அக்னி வீரர்களாக பணியில் சேர விரும்புவோர், ராணுவத்தின் ஆள்சேர்ப்பு தொடர்பான இணையதளத்தில் முறையாக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூலை முதல், இதற்கான பதிவு துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:அக்னிபத் திட்டத்தின் கீழ் சேருவோர், ஏற்கனவே ராணுவத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள, ‘ரேங்க்’கின் கீழ் இல்லாமல், தனித்துவமான ரேங்கின் கீழ் பணியமர்த்தப்படுவர். நான்கு ஆண்டு பணி முடித்த அக்னி வீரர்கள், தங்கள் பணிக்காலத்தில் அறிந்து கொண்ட ராணுவம் பற்றிய முக்கியமான தகவல்களை, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இதை மீறினால், அதிகாரப்பூர்வ ரகசிய சட்டப் பிரிவுகளின் கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்காலம் முடிவடைவதற்கு முன், பணியிலிருந்து வெளியேற அக்னி வீரர்களுக்கு அனுமதி இல்லை. தகுதி வாய்ந்த அதிகாரிகள் அனுமதி அளிக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் மட்டும் இதற்கு விலக்கு உண்டு.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version