வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ராமர் கோவில் கருவறை கட்டும் பணிதுவங்கியது!

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமையும் ராமர் கோவிலுக்கான கருவறை கட்டுமானப் பணிகள் நேற்று முறைப்படி துவங்கின. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து, இந்தப் பணிகளை துவக்கி வைத்தார்.

வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், கோவிலை திறப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, ஹிந்து கடவுள் ராமருக்கான கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.கடந்த 2020 ஆகஸ்டில் கோவில் கட்டுமானத்துக்கான அடிக்கல்லை, பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இதையடுத்து, முதல்கட்டமாக அடித்தளம் அமைக்கும் பணி துவங்கியது.

திட்டமிட்டபடி இந்தப் பணி முடிந்ததை தொடர்ந்து, கருவறை உட்பட கோவில் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பூஜைகள் செய்யப்பட்டு, இந்தப் பணி துவக்கி வைக்கப்பட்டது. இதில், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, அயோத்தி முழுதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.
பூஜைகளுக்குப் பின், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:இது, இந்தியா மீது படையெடுத்தவர்களுக்கு எதிராக கிடைத்துள்ள மற்றொரு வெற்றியாகும். இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தரக்கூடிய நாளாகும். இந்தக் கோவில், மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும். இது, தேசியக் கோவிலாக விளங்கும். கடந்த 500 ஆண்டுகளாக பக்தர்களின் மன வேதனைகள் முடிவுக்கு வர உள்ளன.முகலாயர்கள் படையெடுப்பால், இந்திய மக்களின் நம்பிக்கைகள் சேதப்படுத்தப்பட்டன; தரைமட்டமாக்கப்பட்டன. தற்போது இந்தியா வென்றுள்ளது.



இதற்காக எத்தனை துறவியர், வி.எச்.பி., யின் அசோக் சிங்கால் உள்ளிட்ட தலைவர்கள், லட்சக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், பக்தர்கள் போராடிஉள்ளனர். சரியான பாதையில், உண்மை மற்றும் நீதியின் மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது.இனி, கோவில் கட்டுமானப் பணி வேகமாக நடைபெறும். மிக விரைவில் ராமருக்கான கோவில் தயாராகும். இந்தக் கோவில், சனாதன தர்மத்தின் ஒரு அடையாளமாக, நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகெங்கும் விளங்கும்; நம் நாட்டின் ஒற்றுமையின் சின்னமாகவும் இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Exit mobile version