ஸ்டாலின் அவர்கள் உணர்வாரா அல்லது உணர்ந்தும் எதிர்ப்பாரா?

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.

மாநிலங்களை ஓரம்கட்டும் இச்சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார் தி மு க தலைவர் ஸ்டாலின் அவர்கள்.

தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள், இந்த சட்ட திருத்த பரிந்துரையை படித்து பார்த்தாரா அல்லது படித்து விட்டு வேண்டுமென்றே இந்த அறிக்கையை விடுத்துள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.

மின்சாரத்துறையின் மூலம் மக்களின் நிதி, ‘ஓரம் கட்டப்பட்டுவிடக்கூடாது’ என்பதையே இந்த சட்ட திருத்த பரிந்துரை கூறுகிறது என்பதை ஸ்டாலின் அவர்கள் அறிந்து கொண்டிருப்பார். ஒரு வேளை, அதனால் தான் எதிர்க்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது?

2014ல் பாஜக அரசு வந்த நாள் முதல் இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் மின்சாரத்தை பரவ செய்தது மிக பெரிய சாதனை. குறிப்பாக தடையற்ற, குறையற்ற மின்சாரத்தை அளித்தது பாஜக அரசு. ஆனாலும் மின் துறையில் மாநில அரசுகளின் இயலாமை, லஞ்சம் மற்றும் ஊழல், நிர்வாக கோளாறுகள், விநியோகத்தில் குளறுபடி, தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலை போன்ற பலவேறு குறைபாடுகளை களைய பல முறை முயற்சித்து வந்த நிலையில், அருமையான பல்வேறு சீர்திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது இந்த திருத்த பரிந்துரை. குறிப்பாக, மாநில அரசுகளின் தலையீடுகளால் மின் பகிர்வு நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கி, அதிக நஷ்டத்தில் இயங்கும் சூழ்நிலையை மாற்றியமைக்கிறது இந்த திருத்தம். லஞ்சம், ஊழலை முற்றிலுமாக மின்சார துறையிலிருந்து ஒழித்து கட்டும் மிக பெரிய சீர்திருத்தமாகவே இது அமையும்.

மேலும், திரு. ஸ்டாலின் அவர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் இலவச மற்றும் மானிய திட்டங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியிருப்பது முற்றிலும் தவறு. மாநில அரசுகள் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரத்தை அளிப்பதையோ, ஏழைகளுக்கு மானிய விலையில் மின்சாரத்தை வழங்குவதையோ தடை செய்யவில்லை இந்த திருத்தம்.

மாறாக, மின் நிறுவனங்கள் மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவிற்கான தொகையை வசூலிக்கும் அதே நேரத்தில், மாநில அரசுகள் வழங்கும் இலவசத்தையும், மானியத்தையும் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணமாக நேரடியாக செலுத்த வேண்டும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறது. இதனால் மின் பகிர்மான நிறுவனங்களின் இருப்பு நிலை வலுப்படுவதோடு, மேலும் பல்வேறு நிறுவனங்கள் இந்த துறையில் முதலீட்டை பெருக்குவதற்கான பெரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது இந்த சட்ட திருத்த பரிந்துரை.

நஷ்டத்தை தொடராமல் தொழில்நுட்பத்தை பெருக்கி பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது புதிய மின்சார சட்டதிருத்த பரிந்துரை. உள்கட்டமைப்பு, சீரான தங்கு தடையில்லா மின்சாரம், புதிய தொழில்நுட்பம், லஞ்ச ஊழலற்ற நிர்வாகம் இவைகளையே பரிந்துரைக்கிறது இந்த புதிய மின்சார சட்ட திருத்த பரிந்துரை.

கட்டுரை :- நாராயணன் திருப்பதி மாநில செய்திதொடர்பாளர் பாரதிய ஜனதா கட்சி.

Exit mobile version