நாடாளுமன்றத்தின் மக்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ, கீழ்க்கண்ட தகவல்களை அளித்தார்.
விளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் 400 மீட்டர் நீளம் கொண்ட செயற்கை தளத்தை ரூ 7 கோடியில் அமைப்பதற்கான கருத்துருவை திட்ட மதிப்பிடுதல் குழு பரிந்துரை செய்தது. ஒப்புதலுக்காக இது அடுத்த கட்டத்துக்கு செல்லவுள்ளது.
விளையாடு இந்தியா திட்டத்தின் கீழும், ஒரே இந்தியா, ஒப்பற்ற இந்தியா திட்டத்தின் மூலமும் உள்நாட்டு/பழங்குடியினர் விளையாட்டுகளை அமைச்சகம் ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும், வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் உதவித் தொகை மற்றும் விருதுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.
கபடி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 126 கபடி வீரர்கள் திறன் கண்டறிதல் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய விளையாட்டு ஆணையத்தின் மையங்களில் கபடி வீரர்களுக்கு பயிற்சி அளிகப்படுகிறது.
தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் மூலம் விளையாட்டுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. 2019-20-இல் நிதியுதவிக்காக ரூ 300.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2020-21-இல் ரூ 245 கோடி செய்யப்பட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றின் போது வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் நலன் கருதி இணைய வழி பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. கருத்தரங்கங்களும், பயிற்சி பட்டறைகளும் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டன.
விளையாட்டு மாநில பிரிவில் இருந்தாலும், இந்தத் துறையில் மத்திய அரசு பல்வேறு வகைகளில் மாநிலங்களுக்கு உதவி புரிகிறது. விளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் 2932 வீரர்களும், இந்திய விளையாட்டு ஆணைய திட்டங்களின் கீழ் 10248 வீரர்களும் தொடர் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவாவில் 2020 அக்டோபர் 20 முதல் 2020 நவம்பர் 4 வரை நடக்கவிருந்த 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு உள்கட்டமைப்புக்காக கோவா அரசுக்கு ரூ 97.80 கோடி மத்திய நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய போதை மருந்து பரிசோதனை ஆய்வகம் ஆய்வகங்களுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் உலகளாவிய போதை மருந்துத் தடுப்பு முகமையின் தேவைகளை பூர்த்தி செய்து, இது தொடர்பான அறிக்கையை உலகளாவிய போதை மருந்துத் தடுப்பு முகமையிடம் 2020 ஆகஸ்ட் 29 அன்று சமர்ப்பித்திருக்கிறது.
தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத் தொகையை அரசு சமீபத்தில் அதிகரித்துள்ளது. ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூ 7.5 லட்சத்தில் இருந்து ரூ 25 லட்சமாகவும், துரோணாச்சார்யா விருதுக்கான (பொது) பரிசுத்தொகை ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 10 லட்சமாகவும், துரோணாச்சார்யா விருதுக்கான (வாழ்நாள் பிரிவு) பரிசுத்தொகை ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 15 லட்சமாகவும், அர்ஜுனா விருதுக்கான பரிசுத்தொகை ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 15 லட்சமாகவும், தியான் சந்த் விருதுக்கான பரிசுத்தொகை ரூ 5 லட்சத்தில் இருந்து ரூ 10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.