பீஹாரில், கழிவு நீர் கால்வாயில் மிதந்த ரூபாய் நோட்டுகளை, பொது மக்கள் போட்டி போட்டு அள்ளிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்கு, ரோக்தாஸ் மாவட்டத்தின் மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவு நீர் கால்வாய் ஒன்றில், 2,000 – 500 – 100 – 10 ரூபாய் நோட்டுகள் மிதந்தன.
உடனே அங்கு வந்த கிராம மக்கள், கழிவு நீரையும் பொருட்படுத்தாமல், கால்வாய்க்குள் இறங்கி ரூபாய் நோட்டுகளை அள்ளினர்.மேலும் இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் உண்மையானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கழிவுநீர் கால்வாயில் இறங்கி போட்டி போட்டு ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் அள்ளிய ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.இது குறித்து தகவல்அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, கால்வாயில் கிடந்த ரூபாய் நோட்டுகள் உண்மையானது தானா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.மேலும், ரூபாய் நோட்டுகளை கால்வாயில் வீசியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.