தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி வரலாற்று வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து..

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டிகள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் போட்டியில், 12ந்தேதி நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 43 ஆண்டுகளுக்கு பிறகு அரை இறுதிக்குள் நுழைந்தது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில், இந்திய ஆடவர் அணி 3-2 என்ற புள்ளி கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


இந்த நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் ஆடவர் இறுதி போட்டி பாங்காக்கில் இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் இந்திய அணி 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை எதிர்கொண்டது.


இதில், இந்திய வீரர் லக்சயா சென் முதல் போட்டியில் 8-21, 21-17,  21-16 என்ற புள்ளி கணக்கில்  அந்தோணி கின்திங்கை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால், இறுதி போட்டியில் 1-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.அதை தொடர்ந்து இரண்டாவது சுற்றில் இந்திய இணை சாத்விக் – சிராக் இணை வெற்றி பெற்றனர். 3-வது போட்டியில் இந்திய அணியின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தாமஸ் கோப்பையை  வென்றது.


தாமஸ் கோப்பையின் 73 ஆண்டுகால வரலாற்றில் இந்திய அணி முதன் முறையாக பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. 14 முறை சாம்பியனான இந்தோனேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,சரித்திரம் படைத்தது இந்திய பேட்மிண்டன் அணி! தாமஸ் கோப்பையை இந்திய அணி வென்றதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது. எங்கள் திறமையான அணியினருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி எதிர்காலத்தில் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version