நீட் தேர்வு குறித்த உண்மைகளைப் பேச பாஜகவை அனுமதிக்கவில்லை தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் (13-9-2021) நிறைவுப் பெற்றது. நிறைவு நாளான இன்று நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குகோரும் சட்ட மசோதாவை முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தில் சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் பேசினார். நீட் தேர்வு குறித்த உண்மைகளைப் பேச அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குறுக்கீடுகள் அதிகமாக இருந்தன.
அதனால் வெளிநடப்பு செய்து, சட்டப்பேரவைக்கு உள்ளே பேச வேண்டியதை, சட்டப் பேரவைக்கு வெளியே பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் நுழைவுவாயிலில் செய்தியாளர்களிடம் நான் பேசியது:மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்வு, ‘சமூக நீதி’க்கு எதிரானது என்று ஆளும் திமுகவும், தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
‘சமூக நீதி’ என்றால் ‘இட ஒதுக்கீடு’. நீட் தேர்வால் பட்டியலின (SC), பழங்குடியின (ST), பிற்படுத்தப்பட்ட(BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) பிரிவினருக்கான இட ஒதுக்கீடு எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது எந்த இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டதோ, எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்ததோ அதே இட ஒதுக்கீட்டு முறை தான் நீட் தேர்வு வந்த பிறகும் பின்பற்றப்படுகின்றன.
எனவே நீட் தேர்வு ‘சமூகநீதி’க்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு முற்றிலும் பொருத்தமற்றது.ஏழை அடித்தட்டு மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு செல்வதை நீட்தேர்வு தடுக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். நீட் தேர்வு நடைபெறாத, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற 2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. இதனால்தான் கடந்த அதிமுக அரசு, மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது. இந்த இட ஒதுக்கீட்டால் கடந்த ஆண்டு நூற்றுக்கணக்கான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.
லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து நீட் பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என்று ஒரு குற்றச்சாட்டையும் முன் வைக்கிறார்கள். பயிற்சி மையங்களில் படித்தால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும் என்ற நிலை, நீட் தேர்வுக்கு மட்டும் இல்லை. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) படிப்பதற்கும், ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணி தேர்வுகளுக்கும் சிறப்பு பயிற்சியும், கவனமும் எடுத்துக் கொண்டால்தான் வெற்றி கிடைக்கும். நீட் தேர்வுக்கும் இது தான் பொருந்தும். நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணம் பற்றி எதுவும் பேசுவதில்லை. நீட் தேர்வுக்கு முன்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கட்டணங்களை வசூலித்துக் கொண்டு இருந்தன.
நீட்தேர்வு வந்த பிறகு கட்டண முறை ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு சொன்னதால், தகுதியான மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் சூழ்நிலை நீட் தேர்வால் உருவாகியுள்ளது.13 ஆண்டுகளாக தமிழக அரசின் பாடத்திட்டம் மாற்றப்படாததால் 2016-17-ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். பாடத்திட்டம் மாற்றப்பட்ட பிற, கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேசிய சராசரியை விட தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த 15 சதவீத இடங்களில் மற்ற மாநிலங்களை விட தமிழக மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.
இது நீட் தேர்வால் தான் சாத்தியமாகியுள்ளது.இது பற்றி சட்டப்பேரவையில் வெளிப்படையான விவாதத்திற்கு திமுக அரசு தயாராக இல்லை. நீட் தேர்வு பற்றி உண்மைகளைப் பேச சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களுக்குஅனுமதி கிடைக்கவில்லை. அவர் பேசும்போது குறுக்கீடுகள் அதிகமாக இருந்தன. அதனால் தான் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்