ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிறரது முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியதால், பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகளில், ‘‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது, ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைச் செய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.

“2 ஆண்டு காலத்திற்குள் இத்திட்டம் ஏராளமானவர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துப் பயனாளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சிறந்த உடல்நலத்துடன் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதாக திரு.மோடி கூறியுள்ளார்.

‘‘அவர்களின் முயற்சிகள் இத்திட்டத்தை உலகின் மிகப் பெரிய சுகாதார திட்டமாக உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் பல இந்தியர்களின், குறிப்பாக ஏழைகள் மற்றும் கீழ்தட்டு மக்களின் நம்பிக்கையை வென்றுள்ளது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நன்மைகளை விளக்கிய பிரதமர்,  இத்திட்டத்தின் மிகப் பெரிய பயன்களில் ஒன்று கையடக்கம் என குறிப்பி்ட்டார். ‘‘இத்திட்டத்தின் பயனாளிகள் மலிவான கட்டணத்தில் உயர்தர மருத்துவ சிகிச்சையை, தாங்கள் பதிவு செய்த இடத்தில் மட்டும் அல்லாமல், இந்தியாவின் எந்த பகுதியிலும் பெறலாம். இது வீட்டை விட்டு வெளியிடங்களில் பணியாற்றுபவர்கள், அல்லது பதிவு செய்த இடத்தில் இல்லாமல் வேறு இடங்களில் இருப்பவர்களுக்கு உதவுகிறது’’ என்று திரு மோடி தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலில் ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகளுடன் தன்னால் உரையாட முடியவில்லை என பிரதமர் கூறியுள்ளார். இருப்பினும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியான, மேகாலயாவைச் சேர்ந்த பூஜா தபாவுடன் தொலைபேசியில் அவர் உரையாடினார்.

Exit mobile version