இந்தியாவில் முதன்முறையாக அவசர கால ஆட்டோ ஊர்தி சேவை வழங்கிய நீலகிரி பெண்ணிற்கு பிரதமர் மோடி பாராட்டு.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

“மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார். 

இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன”, என்று பிரதமர் கூறினார்.

பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன், திருமதி ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version