மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கோவிட் உதவிக் கடனாக ரூ.12 கோடி வழங்கப்பட்டு உள்ளது புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட வங்கிகள் சாதனை.

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு மார்ச் 25 முதல் அறிவிக்கப்பட்டது.  ஊரடங்கால் பெண்கள்தான் அதிக அளவில்  பாதிக்கப்படுவார்கள் என்பதால் பிரதம மந்திரி கரீப் கல்யாண் நிவாரணத் தொகுப்பில் மகளிருக்கான பல உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 3 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகை, உஜ்வாலா திட்டத்தில் 3 மாதங்களுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவித் திட்டமும் அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்புக்களுக்கு ஏற்ப புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள வங்கிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கோவிட் சிறப்புக் கடன்களை வழங்கத் தொடங்கின.  பொதுஊரடங்கால் வாழ்வாதாரம் மறந்து தவிக்கும் ஏழை மற்றும் கிராமப்புற மகளிருக்கு இந்தக் கடன் பேருதவியாக இருக்கிறது.  மகளிர் குழுவின் ஒரு பெண் உறுப்பினர் அதிகபட்சமாக ரூ.10,000 கடன் பெற்று வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். ஒரு குழுவாக அதிகபட்சம் ரூ.2லட்சம் கடன் பெறலாம்.  முதல் 6 மாதங்களுக்கு இந்தக் கடன்களுக்கான தவணைகளை கட்டத் தேவையில்லை.

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கோவிட் உதவிக் கடன்களை வங்கிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து வழங்கி வருகின்றன.  புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் இதுவரை (27-5-2020) மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.12 கோடி கடனாக வழங்கி உள்ளன என்று புதுச்சேரி முன்னோடி வங்கி மேலாளர் ஏ.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.  புதுச்சேரி மாவட்டத்தில் 674 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 8848 உறுப்பினர்களுக்கு 8,41,75,000 ரூபாய் கடனாக வழங்கப்பட்டு உள்ளது.  அதே போன்று காரைக்கால் மாவட்டத்தில் 315 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 4296 உறுப்பினர்களுக்கு 3,62,35,000 ரூபாய் கடனாக வழங்கப்பட்டு உள்ளது.  புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் மொத்தமாக 989 சுயஉதவிக் குழுக்களின் 13,144 உறுப்பினர்களுக்கு 12,04,10,000 ரூபாய் கோவிட் சிறப்புக் கடனாக வழங்கப்பட்டு உள்ளது என்று முன்னோடி வங்கியின் மேலாளர் உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

இதில் புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் இந்தியன் வங்கி 240 மகளிர் குழுக்களைச் சேர்ந்த 3041 மகளிருக்கு ரூ.2,85,45,000 தொகையும் புதுச்சேரி பாரதியார் கிராமிய வங்கி 364 மகளிர் குழுக்களைச் சேர்ந்த 4925 மகளிருக்கு ரூ.4,84,10,000 தொகையும் புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி 20 மகளிர் குழுக்களின் 262 மகளிருக்கு ரூ.26,20,000 தொகையும் யுகோ வங்கி 28 மகளிர் குழுக்களின் 338 மகளிருக்குரூ.16,90,000 தொகையும் கடனாக வழங்கியுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஊரகப் பகுதிகளில் இந்தக் கடன் வழங்கப்படுவதை தெரிந்து கொள்வதற்காக புதுச்சேரி மாவட்டத்தில் இந்தியன் வங்கியின் கூடப்பாக்கம் மற்றும் சேலியமேடு கிளைகளுக்குச் சென்றோம். கூடப்பாக்கம் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் கே.ராஜா தனது கிளை மூலம் 28 மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 364 உறுப்பினர்களுக்கு 34,80,000 ரூபாய் கடன் வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.  அதே போன்று சேலியமேடு இந்தியன் வங்கி கிளை மேலாளர் ஹரிகரசுதன் கண்ணன் தனது கிளை மூலம் 23 குழுக்களைச் சர்ந்த 300க்கும் அதிகமான மகளிர் உறுப்பினர்களுக்கு 32,00,000 ரூபாய் கடன் தந்து உள்ளதாக கூறினார்.  இந்த 2 வங்கிக் கிளைகளிலும் கோவிட் உதவிக் கடன் பெற்ற சில மகளிரிடம் கருத்துக் கேட்டோம்:

பிரியங்கா, ஸ்ரீசாய்பாபா மகளிர் குழு, கூடப்பாக்கம்: நான் அழகுக் கலை நிபுணராக இருக்கிறேன்.  ஊரடங்கால் வாங்கி வைத்த அழகு சாதனப் பொருட்கள் அனைத்தும் வீணாகி விட்டன.  என்ன செய்வது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் போது மத்திய அரசு அறிவித்த மகளிர் குழு கடனான 10,000 ரூபாய் இந்தியன் வங்கி மூலம் கிடைத்தது.  அதன் மூலம் புதியதாக பொருட்களை வாங்கி மீண்டும் தொழிலைத் தொடங்கி உள்ளேன்.  மத்திய அரசுக்கும் இந்தியன் வங்கிக்கும் நன்றி.

கோவிந்தவதி, ரோஜா மகளிர் குழு, கூடப்பாக்கம்

நான் துணி வியாபாரம் செய்து வருகிறேன்.  கொரோனாவால் வீட்டை விட்டு வெளியில் போக முடியாததால் நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.  புதுத் துணி வாங்க பணம் இல்லாமல் வருத்தமாக இருந்தேன்.  இப்போது இந்தியன் வங்கியின் மகளிர் குழு கடனான 10,000 ரூபாய் உதவியாக உள்ளது.

சித்ரா, சேலியமேடு: ஊரடங்கால் எங்களது வாழ்வாதாரமே பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.  மாவட்ட ஊராட்சி முகமை மூலமாக மகளிர் குழுக்களுக்கு கடன் அளிப்பதாக தெரிந்து இந்தியன் வங்கியை அணுகினேன்.  கடன் கிடைத்தது.  மத்திய அரசுக்கு நன்றி.

கோவிந்தம்மாள், கலைமகள் மகளிர் குழு, சேலியமேடு: 2 மாதமா ஊரடங்கால் வேலை எதுவும் இல்லாமல் ரொம்பக் கஷ்டப்பட்டேன்.  இந்தியன் வங்கில 10,000 ரூபாய் கடனா கொடுத்து இருக்கிறாங்க.  அந்தப் பணத்தை அப்படியே தொழில்ல போட்டு இருக்கேன்.  அரசுக்கும் வங்கிக்கும் நன்றி.

!!!

கே.ராஜா, கிளை மேலாளர், இந்தியன் வங்கி, கூடப்பாக்கம்

ஹரிகர சுதன் கண்ணன், கிளை மேலாளர், இந்தியன் வங்கி, சேலியமேடு

பிரியங்கா, சாய்பாபா மகளிர் குழு, கூடப்பாக்கம்

கோவிந்தவதி, ரோஜா மகளிர் குழு, கூடப்பாக்கம்

கோவிந்தம்மாள், கலைமகள் மகளிர் குழு, சேலியமேடு

சித்ரா, மகளிர் குழு உறுப்பினர், சேலியமேடு

ஏ.உதயகுமார்

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்

புதுச்சேரி

Exit mobile version