ரங்கராஜ் பாண்டே ரஜினியின் மூணு வரிகளுக்கு முப்பது நிமிடத்துக்கு மேல் இண்டெர்ப்ரட்டேஷன் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் பேசியதை டீகோட் (DECODE) செய்வோம் என்று சொல்லி தான் ஆரம்பிக்கிறார்.
இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது ரஜினியின் பேச்சு. ஒரு தலைவன் தான் நினைத்ததை தன் தொண்டர்களுக்குப் புரியும் வகையில் கூட சொல்லத் தெரியாவிட்டால், எப்படி ஒரு கூட்டத்தைத் தொடர்ந்து வழிநடத்த முடியும்? பாண்டே தெரிந்தே தான் டீ கோட் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் போல.

குறைந்த நிர்வாகிகள் கொண்ட நிர்வாகம் என்று சொன்னதால் அவரது ரசிகர்கள் ஒதுங்க ஆரம்பித்து விட்டனர் என்று தெரிந்தவுடன், இல்லை இல்லை தேர்தல் நேரத்தில் எல்லாரையும் பயன்படுத்திக் கொள்வோம் என்பதால், சட்டமன்றம்/பா.மன்றம்/உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்ந்து வருவதால் நீங்களும் தொடர்ந்து பதவிகளில் இருப்பீர்கள் என்று சப்பைகட்டி ரசிகர்களைத் தக்க வைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த விளக்கமே ரஜினி சொன்ன கொள்கைக்கு முரணாக இருக்கிறதே?

மாற்று அரசியல் வேண்டுமா என்று மக்கள் சொன்னால் தான் வருவேன் என்பதன் பொருள், ரஜினி மாற்று அரசியலைக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். மக்கள் தான் அதை வேண்டுமா வேண்டாமா முடிவு செய்து சொல்லணும் என்கிறார். மக்கள் எப்படி சொல்லுவாங்க? ஃபோன் பண்ணியா இல்லை வாட்ஸ் அப் பண்ணியா? காமெடியா இல்ல?

பாண்டேக்கு அரசியல் சொல்லிக் கொடுக்கணுமா என்ன? கட்சியை ஆரம்பித்து, அதில் நிர்வாகம் செய்து காட்டி, இது தான் மாற்று அரசியல் இதைப் போல தான் ஆட்சியும் இருக்கும். வாங்க வந்து எனக்கு ஓட்டுப் போடுங்க என்று அழைப்பது தானே ஒரு தலைவனுக்கு அழகு?

மாற்றத்தை விரும்பாவிட்டால் மக்கள் விஜயகாந்துக்கு 8% ஓட்டு எப்படி போட்டிருப்பார்கள்? அதுவும் இவர் சொல்லும் பெரிய ஆளுமைகள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இருக்கும் போதே? எவனாவது வர மாட்டானா? வந்து காப்பாத்த மாட்டானா என்று 50% மக்களுக்கு மேல் காத்திருக்கின்றனர் என்பது கூட தெரியாமலா இத்தனை அரசியல் அலசல்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

சரி, சிஸ்டம் சரியில்லை என்று 2017ல் உள்ளே வந்தவர், கடந்த ரெண்டு வருடங்களாக கட்சியை தான் நினைத்தது போல் கட்டமைக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? திடீர்னு வந்து சில மாவட்ட நிர்வாகிகள் மீது வருத்தமாக இருக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு தான் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது.

ரஜினிக்கு, “ தான் சொல்வதை எல்லாம் தட்டாமல் செய்யும் அனுமன் சேனை தான் தன் ரசிகர்கள்” என்ற மாயை இருந்தது (இருக்கிறது).

அவர் ரசிகர்களுக்கோ, “ரஜினி என்ற பிம்பத்தினாலே எல்லாம் கிடைத்து விடும் என்ற மாயை”யில் இருக்கிறார்கள். ரஜினி ரசிகர்கள் பெரும்பாலும் காமா வகை ஆட்கள். அடிப்படையில் துதிபாடிகள். திரையில் காணும் பாத்திரத்தின் வெற்றியெல்லாம் தன் வெற்றி என்று புளகாகிதம் கொண்டவர்கள்.

இப்படி இரண்டு முரண்களை வைத்துக் கொண்டு புதிய வழியை/ இலக்கை எப்படி அடையப் போகிறார்கள்?

முதலில் கட்சியை ஆரம்பித்து, ஆட்சிக்கு முன்னோட்டமாக கட்சியை வழிநடத்திக் காட்டச் சொல்லுங்கள். மக்கள் தானாகவே திரண்டு வந்து ஆதரவு கொடுப்பார்கள்.


அதை விட்டு விட்டு பொலிடிகல் சைன்ஸ்ல மூணாவது பாடத்தில் நாலாவது பாராவை வாசிச்சுக் காட்டியது போல் அறிக்கை விட்டுட்டிருப்பது கறிக்குதவாத சுரையாகத் தான் இருக்கும்.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் ஆனந்தன் அமிர்தன் பதிவு.

Exit mobile version