“சம்பந்தப் பெருமான் தேவாரம்” திருப்பாசூர் திருப்பதிகம்

குறிப்பு: திருப்பாசூர், இத்தல இறைவர் மூங்கில் காட்டில் இருந்து வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி, தொண்டை நாட்டு தலங்களில் ஒன்றான இது திருவள்ளூரில் இருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

“இத்தல இறைவர் தீண்டா திருமேனியாக எழுந்தருளியுள்ளார்”, அம்பாள் வழிபட்ட தலம், சந்திரன் தேவர்கள் பூசித்த பதி

இவருக்கு “பாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், பாசசூருடையவர், பாசூர்நாதர்” என்னும் நாமங்கள் உண்டு

விநாயகர் திருச்சபை, விலங்கிட்ட காளியம்மை, வினைதீர்த்த ஈஸ்வரர் என்னும் மூர்த்தங்கள் கண்டு தொழவேண்டிய அற்புதங்கள்

“பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூர், பண்ணின் மொழியார் பாடல் ஓவா பாசூர் என்றெல்லாம் பிள்ளை பெருமானார் போற்றும் தலம் இது”

“சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார் பந்தி செஞ்சடை பாசூர் அடிகள்” என்பது அப்பரடிகள் திருவாக்கு

“வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு செய்ததற்கு வீடு காட்டி” என்று திருவானைக்காவில் வழிபட்ட சிலந்தி மற்றும் யானை என்ற சிவகணத்தாரின் சரிதம் கூறும் அப்பரடிகள் தாண்டகம் இத்தலத்தில் இடம்பெற்றுள்ளது

எம்மையாளும் அம்மைத்திருத் தலையாலே வணங்கியது, என்று ஊர்புறத்தே தாங்கியிருந்து பின் இறைவனார் கனவிடை எழுந்தருளி “பாடல் வேண்ட,” பொழுது விடிந்ததும் பழையனூர் திருவாலங்காடு பாடி தேவரணையும் திருப்பாசூர் நோக்கிச் சென்றனர்,

அங்கணைந்த மறைவாழ்வாம் சைவசிகாமணியாரை பாசூர் அடியார் பெருமக்கள் வணங்கி எதிர் கொண்டனர் அவர்களை வணங்கிப்

“பொருப்பரையன் மடப்பாவை இடப்பாகத்துப் புராதனர் வேயிடங்கொண்ட புனிதர் கோயில் விருப்பின் உடன் வலங்கொண்டு புக்குத் தாழ்ந்து வீழ்ந்து எழுந்து மேனியெலாம் முகிழ்ப்ப நின்றே அருட்கருணைத் திருவாளன் நாமஞ் “சிந்தையிடையார்” என்று இசைப்பதிகம் அருளிச் செய்தார்” என்கின்றார்கள் தெய்வச்சேக்கிழார் பெருமானார்!!

அந்தணர்கள் சூளாமணியாம் புகலிவேந்தர் சந்தநிறைை செந்தமிழால் செம்மையுற செய்தளித்த “சிந்தை இடையார்” என்ற திருப்பதிகப் பாடல்கள் இவை!!

பண் : காந்தாரம்

பாடல்

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளா வென்ன மகிழ்வார் ஊர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்று
ஆருந் தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்
ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்
பாரின் மிசையார் பாடல் ஓவாப் பாசூரே

கையால் தொழுது தலைசாய்த்து உள்ளங் கசிவார்கண்
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விகிர்தனார்
நெய்யாடுதல் அஞ்சுடையார் நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகங் கோடலீனும் பாசூரே

பொருள்

மனத்திலும், தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர், மாலைக்காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர், மைந்தா! மணாளா! என்று அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்

இடம் விட்டுச்செல்லும்போதும், வரும் போதும் பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர். ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும் ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும்

கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும், உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் உடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும் ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக்காந்தள் பூக்கள் மலர்ந்துள்ள பாசூராகும்.

திருச்சிற்றம்பலம்

Exit mobile version