இந்தியாவை பிணைக்கும் ஆன்மிகம்! வானதி சீனிவாசன் சிறப்பு கட்டுரை!

உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர், மகாகாளியை தரிசித்தேன் ஆடு மேய்க்கும் சிறுவனை நீதிபதியாக்கிய விக்கிரமாதித்தன் சிம்மாசனம்

சங்பரிவார் அமைப்புகளில் தேசிய அளவில் பொறுப்பு வகிக்கும் பெண் தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் (மகிளா சமன்வய) பங்கேற்பதற்காக இரு நாள்கள் பயணமாக மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் வந்திருந்தேன்.

அந்த பயண அனுபவங்களை எனது முகநூல் பக்கத்தில் விரிவாகப் பதிவு செய்திருந்தேன். அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த ஆதரவுதான் சட்டமன்ற கூட்டத்தொடர் பணிகளுக்கும் இடையிலும் என்னை எழுத தூண்டி வருகிறது.

இந்தூர் செல்கிறோம் என்றதும் உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். சிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயில், பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பன்னிரு ஜோதிர்லிங்க கோயில்கள் இரண்டு உள்ளன. நர்மதை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஓம்காரேஸ்வரர் கோயிலும் பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். ஓம்காரேஸ்வரர் கோயில் ஆதிசங்கரருக்கு குரு கிடைத்த இடம் என்று சொல்கிறார்கள்.

உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர் கோயில் சுயம்புவாக சிவன் தோன்றிய இடம் என்பது ஐதீகம். உஜ்ஜையினி-க்கு இன்னொரு சிறப்பும் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றான மாகாளி அம்மன் கோயில் உள்ளது.

பார்வதி தேவியின் இறந்த உடலை தூக்கிக் கொண்டு சிவபெருமான் நடனமாடும்போது, சுதர்சன சக்கரத்தால் விஷ்ணு பார்வதி தேவியின் உடலை அறுத்துப் பிரித்தபோது முழங்கை விழுந்த இடமே உஜ்ஜையினி மாகாளி கோயில் என்கிறார்கள்.

இந்த இரு கோயில்களுக்கும் ஏற்கனவே இரு முறை சென்றிருக்கிறேன். ஆனால், மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறையவில்லை. இந்தூரில் எனக்கான பணிகள் முடிந்ததும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை உஜ்ஜையினி புறப்பட்டேன்.

வழியெங்கும் பசுமையான கரிசல் மண் காடுகள் பயணத்தை இனிமையாக்கின. ஒன்றரை மணி நேரத்தில் மகாகாலேஸ்வரர் கோயில் வாயிலில் வந்திறங்கினோம்.

மூன்றடுக்கு மகாகாலேஸ்வரர்:

முதலில் மகாகாலேஸ்வரரை தரிசிக்க கோயிலில் நுழைந்தேன். உடன் உள்ளூர் பாஜக மகளிரணி நிர்வாகிகள் வந்திருந்தனர். இது மூன்றடுக்கு ஆலயம். முதல் அடுக்கில் அதாவது பாதாளத்தில் மகாகாலேஸ்வரர். நடுவில் அதாவது இரண்டாம் அடுக்கில் ஓம்காரேஸ்வரர்.

மேலே மூன்றாவது அடுக்கில் நாகசந்திரேஸ்வரர் உள்ளனர். இந்த நாகசந்திரேஸ்வர் கோயில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது நாக பஞ்சமி தினத்தன்று மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது.

படிக்கட்டுகள் வழியாகச் சென்று பாதாளத்தில் உள்ள மகாகாலேஸ்வரரையும், நடுவில் உள்ள ஓம்காரேஸ்வரரையும் மனம் குளிர தரிசித்தோம். இந்த ஆலய நிர்வாகிகள் அளித்த மரியாதையை பயபக்தியுடன் ஏற்றுக் கொண்டேன். இந்த ஆலயத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கும் சன்னிதி உள்ளது.

இங்கு ஸ்ரீகிருஷ்ணருக்கு ‘சாட்சி கோபால்’ என்று பெயர். அருகில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான மகாகாளி கோயிலுக்குச் செல்பவர்கள், மகாகாலேஸ்வரரை தரிசித்த பிறகு செல்கிறார்கள். மகாகாலேஸ்வரரை தரிசித்து விட்டோம்.

இனி மகாகாளியை தரிசிக்க செல்கிறோம் என்பதை இங்குள்ள ஸ்ரீகிருஷ்ணரிடம் சொல்லிவிட்டு செல்வதை ஒரு சம்பிரதாயமாக வைத்துள்ளனர். இதனால் ஸ்ரீகிருஷ்ணரை இங்கு ‘சாட்சி கோபால்’ என்று அழைப்பதாக சொன்னார்கள்.

ஒவ்வொரு வழக்கத்திற்கும் உள்ள பின்னணி வரலாறு அர்த்தம் பொதிந்ததாக இருப்பதை ஒவ்வொரு இடத்திலும் காண முடிகிறது. மறுநாள் (ஆகஸ்ட் 30) கிருஷ்ணர் ஜெயந்தி என்பதால் ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த அற்புதக் காட்சியை தரிசிக்க முடிந்தது.

ஆடு மேய்க்கும் சிறுவனும், ஆர்எஸ்எஸ் தலைவரும்:

சாட்சி கோபாலிடம் அனுமதி பெற்றுவிட்டு மகாகாளி கோயிலுக்குச் சென்றோம். உஜ்ஜையினி விக்கிரமாதித்தன் அரசாண்ட இடம். விக்கிரமாதித்தன 11 முறை தனது தலையை வெட்டி காளிக்கு காணிக்கையாக தந்ததாகவும், காளியின் அருளால் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்தன் உடலில் தலை ஒட்டிக்கொண்டு உயிர் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

விக்கிரமாதித்தன் என்றதும் எனக்கு வேறொரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள் தனது 50 வயதில் காலமானார். 1925-ல் அதாவது தனது 35-வது வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை தொடங்கினார்.

15 ஆண்டுகளுக்குள் ஆர்எஸ்எஸ்ஸை பலமிக்க அமைப்பாக மாற்றிய சாதனையாளர் அவர். மறைவதற்கு முன்பாக 34 வயதான குருஜி என்றழைக்கப்பட்ட திரு. மாதவ சதாசிவ கோல்வால்கர் அவர்களை ஆர்எஸ்எஸ் தலைவராக நியமித்திருந்தார்.

வயதிலும், அனுபவத்திலும் மூத்த பலர் இருக்கும்போது 34 வயதான கோல்வால்கர் தலைவராக நியமிக்கப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. வேகமாக வளர்ந்து வரும் இயக்கம் என்ன ஆகுமோ என்று பலருக்கும் கவலை ஏற்பட்டது.

ஆனால், ஆர்எஸ்எஸ் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் குருஜி கோல்வால்கர் ஆற்றிய உரை, அனைவரது மனதில் இருந்த கவலையையும் போக்கியது. டாக்டர் ஹெட்கேவார் நமக்கு சரியான தலைவரைத் தான் அடையாளம் காட்டியிருக்கிறார் என்று மூத்தவர்களும் மகிழ்ந்தனர்.

ஆர்எஸ்எஸ் தலைவராகப் பொறுப்பேற்றதும் பேசிய குருஜி கோல்வால்கர், உஜ்ஜையினி நகரை ஆண்ட விக்கிரமாதித்த மகாராஜாவின் வரலாற்றைதான் சுட்டிக்காட்டினார்.

எவ்வித விருப்பு வெறுப்பும் இன்றி தீர்ப்பளிப்பவர் விக்கிரமாதித்தன். வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் வந்ததும் அவர்களை தீர்க்கமான ஒரு பார்வை பார்ப்பார். அந்த பார்வைக்குப் பயந்தே குற்றவாளிகள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்களாம்.

25 தேவதை பொம்மைகளால் சுமக்கப்படும் ஒரு பளிங்கு சிம்மாசனத்தில் அமர்ந்துதான் அவர் தீர்ப்பு சொல்லியிருக்கிறார். விக்கிரமாதித்தன் காலம் முடிந்து பல நூறு ஆண்டுகள் ஆனதும் பளிங்கு சிம்மாசனம் மண்ணில் புதைந்து போனது.

விக்கிரமாதித்தன் அரண்மனை இருந்த இடம் ஒரு காலத்தில் மேய்ச்சல் நிலமானது. ஆடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு தங்களது ஆடுகளை மேயவிடுவார்கள். அவர்கள் பொழுதுபோக்காக ஏதாவது விளையாடுவது வழக்கம்.

ஒருநாள் மேடான இடத்தில் ஒரு சிறுவன் அமர்ந்தான். அவன், மற்ற சிறுவர்களிடம் நான் தான் நீதிபதி. நீங்கள் ஏதாவது குற்றம் செய்தவர்கள் போல வாருங்கள். நான் தீர்ப்பளிக்கிறேன் என்றான். அப்படியே அவனது நண்பர்களான சிறுவர்கள் குற்றவாளிகள் போல நடிக்க, நீதிபதி சிறுவன் அருமையாக தீர்ப்பளித்தான்.

அவனது வார்த்தைகள் ஆடு மேய்க்கும் சிறுவன் பேசுவது போன்று இல்லை. ஆணித்தரமாக நடுநிலையோடு உண்மையான நீதிபதியின் தீர்ப்பு போலவே இருந்தது.

இதுபற்றி ஊர் மக்கள் கேள்விப்பட்டனர். தங்களது சொந்த வழக்குகளை ஊர் மேட்டில் அமரும் சிறுவனிடம் கொண்டு வந்தனர். அவனும் சிறப்பாக தீர்ப்பளித்தான். வழக்குகள் குவிந்தன. அந்த மேடான இடத்தில் அமரும்போது மட்டுமே சிறுவனால் தீர்ப்பு தர முடிந்தது.

வேறு இடத்தில் அவனால் தீர்ப்பளிக்க முடியவில்லை. அதன்பிறகு மன்னர் நடத்திய விசாரணையில் சிறுவன் அமர்ந்த மேடான இடம் விக்கிரமாதித்தன் சிம்மாசனம் புதைந்த இடம் என்பது கண்டறியப்பட்டது. அதாவது விக்கிரமாதித்தன் சிம்மாசனம் புதைந்த இடத்தில் அமர்ந்தால் சிறுவனும் நீதிபதியாகி விடுகிறான்.

இந்த சம்பவத்தைக் கூறிய குருஜி கோல்வால்கர், நானும் அந்த ஆடு மேய்க்கும் சிறுவன்தான். டாக்டர் ஹெட்கேவார் வகித்த ஆர்எஸ்எஸ் தலைவர் பதவி என்பது விக்கிரமாதித்தின் சிம்மாசனம் போன்றது. அதனால் நாம் சாதிப்போம்.

ஆர்எஸ்எஸ்ஸை நாட்டின் மிகப்பெரிய இயக்கமாக வளர்த்தெடுப்போம் என்று பேசினார். அவர் சொன்னது உண்மைாகி விட்டது. ஆர்எஸ்எஸ் நாட்டின் அரசியல் வரலாற்றையே மாற்றியமைத்துள்ளது. ஆர்எஸ்எஸ்ஸில் பயிற்சி பெற்றவர்கள் இன்று குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள் என்று நாட்டை வழிநடத்தும் உயர் பதவிகளில் உள்ளனர்.

உஜ்ஜையினி மகாகாளி கோயிலில் விக்கிரமாதித்தன் பற்றி நினைவுக்கு வந்ததும் குருஜி கோல்வால்கர் பற்றிய இந்த சம்பவமும் எனக்கு நினைவுக்கு வந்தது.

விளக்கொளியில் ஜொலிக்கும் கற்தூண்கள்:

ஏற்கனவே இருமுறை இந்த காளி கோயிலுக்கு வந்திருக்கிறேன். சிறிய கோயில்தான். மகளிரணி நிர்வாகிகளுடன் காளியை தரிசித்தேன். சக்திபீட கோயில் என்பதையும் தாண்டி இந்த கோயிலில் என்னை ஈர்த்தது கோயிலின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள பிரம்மாண்டமான கற்தூண்கள்.

இந்த தூண்களில் சுமார் 2 ஆயிரம் விளக்குகளை ஏற்றுகிறார்கள். அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு பக்தர்கள் முன்பு பதிவு செய்திருக்கிறார்களாம். இதற்கு முன்பு இருமுறையும் பகலில் சென்றதால் விளக்கொளியில் இந்த கற்தூண்களை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

இந்த முறை இரவில் சென்றதால் விளக்கொளியில் கற்தூண்களை கண்குளிர தரிசித்தேன். இந்த கற்தூண்கள் முன்பு நின்று படம் எடுத்துக் கொண்டேன்.

உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர், மகாகாளியை தரிசித்த மன நிறைவோடு இந்தூரில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து அங்கிருந்து திங்கள்கிழமை (ஆகஸ்ட் 30) காலை சென்னை வந்து சேர்ந்தேன். திங்கள்கிழமை மாலை மயிலாப்பூரில் உள்ள நந்தலாலா கோயிலுக்குச் சென்று ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தி வழிபாட்டில் பங்கேற்றது மறக்க முடியாக ஒன்றாக அமைந்தது.

மொகலாயர்கள் ஆட்சியின்போது உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர் கோயில் லிங்கம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த லிங்கம் கண்டறியப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளாக எத்தனை, எத்தனையோ படையெடுப்புகள். மத ரீதியான படுகொலைகள். கோயில் இடிப்புகள். அத்தனையையும் தாண்டி இந்து கலாச்சாரம் தாக்குப் பிடித்து நின்று கொண்டிருக்கிறது. பன்னிரு ஜோதிர்லிங்கங்கள், 51 சக்தி பீடங்கள், 108 வைணவத்திருத்தலங்கள் என்று இந்து ஆலயங்கள் இந்தியாவை பிணைத்திருக்கின்றன.

எத்தனையோ வேற்றுமைகளைத் தாண்டி இந்தியா இன்றும் ஒரே நாடாக இருப்பதற்கு ஆன்மிக பலம்தான் காரணம். உஜ்ஜையினி பயணத்தில் கற்றுக் கொண்ட பாடம் இதுதான்.

Exit mobile version