ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த போது சென்னை வெள்ளம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை தற்போது வைரலாகி வருகிறது. அப்போது அரசு அலட்சியம் என்று கூறினார் தற்போது ஆளும் காட்சியாக இருக்கும் திமுக அரசு என்ன செய்து வருகிறது என்று கேள்விக்கணைகளை பொதுமக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இதோ ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த வேளையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை “வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும், முதலமைச்சரும், உள்ளாட்சித் துறை அமைச்சரும் காட்டிய அலட்சியத்தால், இன்றைக்கு ஒரு நாள் மழையைக் கூடத் தாங்க முடியாமல் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு “டிசம்பர் 2015” வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
.
சென்னையில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் முன்கூட்டியே எச்சரித்தது. ஏற்கனவே 2015 டிசம்பர் வெள்ளத்தில் அ.தி.மு.க. அரசின் தோல்வியால் மக்கள் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது. அதிலும் ஊழல் செய்து- பிறகு சி.ஏ.ஜி அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டும் அதை அ.தி.மு.க. அரசு மறைத்தது. ஆனால் அடைந்த தோல்விகளில் கூட அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது இப்போது கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனாவோ, டிசம்பர் 2015 வெள்ளமோ, இந்த கனமழையோ – எதையுமே எதிர் கொண்டு மக்களைக் காப்பாற்றும் அடிப்படை அருகதையை அரசு இழந்து நிற்கிறது. தேங்கியுள்ள நீர், குளங்கள் போல் சாலைகளில் காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்ல முடியவில்லை. போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய் விட்டது.
இது தவிர, சென்னை புறநகரிலும் கன மழை பெய்கிறது. இன்னும் பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. ஆனால் ஒவ்வொரு பணிக்கும் கோடிக் கணக்கான ரூபாய்களை ஒதுக்கி- அதைச் செலவிடாமலேயே, சுருட்டுவது எப்படி என்ற ஊழல் கலையின் ஊற்றாக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. அதில் உள்ளாட்சித்துறை அமைச்சர், “ஊழல் நாயகனாக “ வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கொரோனாவில் தோற்ற சென்னை மாநகரம், இப்போது ஒரேயொரு கன மழைக்குத் தோற்று நிற்பதும் – மாநகரம் எங்கும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்; வேதனைப்பட வேண்டும்.
சென்னை மாநகருக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருந்தால்- இப்போது குறைந்தபட்சம், கவுன்சிலர்களாவது மக்களோடு துணைநின்று, குறைகளைத் தீர்த்து வைப்பார்கள். அதற்கான வாய்ப்பையும் கெடுத்து விட்டு அமர்ந்திருக்கும் அரசு – அதிகாரிகளையும் ஊழலில் ஈடுபட வைக்கும் பயிற்சியை மட்டும் நன்கு அளித்து, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் – உடனடியாக மழை நீர் வடிவதற்கான அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்- ஏழை எளியோர்க்கு உணவு – உள்ளிட்டவற்றிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசால் முடியவில்லை என்றால் – தயவு செய்து பேரிடர் மீட்புப் படையை அழைத்து – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைத்து, சென்னை மாநகரைக் காப்பாற்றப் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு டிசம்பர் 2015 வெள்ளம் ஏற்பட்டு விடாமல் தடுக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் விரிவான முறையில் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் அதே வேளையில், கழகத்தின் சென்னை மாநகர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிரமப்படும் மக்களுக்கு ஆங்காங்கே தேவையான அளவு உதவிட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
(29.10.2020 அன்று மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை – இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது)
நன்றி : புதிய தலைமுறை.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















