டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ 5,000 கோடி!வழிப்பறியா? விலை உயர்வா? புதிய தமிழகம் தலைவர் ஆவேசம் !

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ 5,000 கோடி!வழிப்பறியா? விலை உயர்வா? ஓட்டுக்குக் கொடுத்த காசை, பாட்டில் மூலம் பறிக்குறாங்க!திக்கெட்டும் பரவுகிறதா திராவிட மாடல்? மதுவிலக்கு அமலிலிருந்த காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காவல்துறைக்கு மறைந்தும், சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் அஞ்சியே என்றாவது ஒருநாள் குடித்து வந்தார்கள்.

அவர்கள் பெரும்பாலும் 40 முதல் 50 வயதைத் தாண்டியவர்களாகவே இருந்தார்கள். கள்ளச்சாராயம், கள் போன்றவற்றை தேடிப்பிடிப்பதே சிரமப்பட வேண்டியதாக இருந்தது. அதில் மாட்டிக் கொண்டால் காய்ச்சியவர்களும், குடித்தவர்களும் சிறை சென்றார்கள். குடிப்போரின் எண்ணிக்கையும் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. அதனால் உடல் நலம் பாதிப்போரின் எண்ணிக்கையும் அற்ப சொற்பமானதாகவே இருந்தது. பல காரணங்களைச் சொல்லி ’திராவிட மாடல்’ இரண்டாவது முறையாக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தபிறகு, 1971ல் கள்ளுக்கடைகளும், சாராயக் கடைகளும் திறந்துவிடப்பட்டன. ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக மது வாசனையே அறியாத ஒரு தலைமுறை குடிப்பழக்கத்திற்கு ஆளானது. அது ஒரு ஆட்சியில் தொடங்கியது; தொடர்ந்து வந்த ஆட்சிகளிலும் நீடித்தது:

இன்று வரை நீடிக்கிறதுகள், சாராயம் போன்ற உள்நாட்டு மது உற்பத்திகள் தடைசெய்யப்பட்டு’ IMFL – India made foreign liquor’ என்ற பெயரில் தமிழக அரசே மது விற்பனையில் டாஸ்மாக் ஈடுபட்ட பிறகு, தமிழகத்தினுடைய ஒட்டுமொத்தமான அரசியல், பொருளாதார, சமூக நிலைகள் முற்றாக மாறிவிட்டன. லட்சக்கணக்கான குடும்பங்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர். எண்ணற்ற இளைஞர்கள் நோயுற்று அவதிப்பட்டனர். எண்ணற்ற பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த நூற்பாலைகளும், பவுண்டரிகளும், சிறு குறு தொழில்களும் அழிந்த போதும், தமிழக அரசியல் அதிகாரத்தைச் சுவைத்த அரசியல் சக்திகளின் தயவோடு துவங்கப்பட்ட மதுபான தொழிற்சாலைகள் மட்டும் மாவட்டந்தோறும் பெருகி வளர்ந்தன; சில கட்சிகளின் செல்வக்களஞ்சியங்களாக மாறின. மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருக்கிறதோ! இல்லையோ !

மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு மட்டும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீரும், மின்சாரமும் வழங்கப்படுகிறது.TASMAC விற்பனை மையங்கள் துவங்கப்பட்ட நாள்முதல் இவர்தான் குடிப்பார், இவர் குடிக்க மாட்டார் என்ற நிலைகள் மாறி பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து வயதினருமே குடிப்பழக்கத்திற்கு ஆளாகினர்; பெண்கள் கூட இதற்கு விதி விலக்கில்லை. ஒரு காலத்தில் ஒருவாரமெல்லாம் உழைத்து விட்டு, உடல் களைப்பு நீங்குவதற்காக விடுமுறை நாளில் குடித்த நிலைகள் மாறி, வேலைக்குச் செல்வதே குடிப்பதற்காக என்ற மிகமிக மோசமான அவல நிலை உருவாகியுள்ளது. 8 மணி நேரத்திற்கு மேலாக ஓவர் டைம் கேட்டு வாங்கி பணி செய்து சம்பாதித்த காலகட்டம் உண்டு. ஆனால், இப்பொழுது வாரத்தில் நான்கு நாட்கள் ஒரு தொழிலாளி வேலை செய்தாலே அது மிகப் பெரிய விஷயம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

வாரச் சம்பளத்தைச் சனிக்கிழமை வாங்கிக்கொண்டு அதை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்ப்போர் நூற்றில் பத்து பேர் இருந்தாலே அது மிகப்பெரிய விசயம்.சனிக்கிழமை மாலை தொடங்கி இரவெல்லாம் குடித்து ஞாயிற்றுக்கிழமை முழுமையாக மயங்கிக் கிடந்து திங்கட்கிழமை காலை 11 மணிக்கு எழுந்து பார்த்து மீண்டும் ஒரு ஆப்போ, புல்லோ உள்ளே தள்ளி விட்டு செவ்வாய்க்கிழமை முதலாளிகளிடமிருந்து பலமுறை அழைப்பு வந்தபிறகு வேலைக்குச் சென்றால் அந்த முதலாளி கொடுத்து வைத்தவராக இருக்க வேண்டும் அல்லது புதன், வியாழன், வெள்ளிக் கிழமைக்கு மட்டுமே வேலைக்குச் செல்வார்கள்.

சனிக்கிழமை வேலைக்கு வந்தாலும் உண்டு, வரவில்லை என்றாலும் இல்லை என்பதே இன்றைய நிலைமை.கைவினைஞர்கள், மரபு சாரா தொழிலாளர்கள், உடலுழைப்பை மட்டும் நம்பியுள்ள பெரும்பாலானோர் காலையில் வேலை துவங்குகின்ற பொழுதே டீக்குடிப்பது போல மதுவை அருந்தி விட்டுத் தான் வேலையைத் துவங்குகிறார்கள். இதுதான் இன்று தமிழகத்தில் இருக்கக்கூடிய நிலை. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், லட்சக்கணக்கான உழைப்பாளர்கள் இந்த மதுப் பழக்கங்களுக்கு இரையானதால் அவர்களுடைய உடல்நிலை மிகப் பெரிய அளவிற்கு பாதிப்புக்கு ஆளாகிறது. இளம் வயதிலேயே இரைப்பை வெந்து, ஈரல் அழுகி தங்கள் இறுதி நாட்களை நோக்கிப் பயணிக்கிறார்கள். கணவன் மனைவி உறவு கெடுகிறது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருகின்றன. பொதுச் சமூகத்தில் பிரச்சனை எழுகின்றன.

கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் நடைபெறவும், அதிகரிக்கவும் பெரும் காரணமாக அமைகின்றன.TASMAC கடைகளில் ஊற்றிக் கொடுக்கப்படும் திராவிட மாடல் ஆட்சியாளர்களால் ஆயிரம் ஆயிரமாண்டு காலம் பேணி வளர்க்கப்பட்ட தமிழ் பண்பாடுகள் சின்னாபின்னம் ஆக்கப்படுகிறது; சீரழிக்கப்படுகிறது. பண்பாடு மட்டுமல்ல, உடல் நலம் மட்டுமல்ல, பெரும்பாலான உழைப்பாளி மக்களுடைய வருவாயின் பெரும் பங்கு இந்த மாநில அரசால் நடத்தப்படும் மதுபான கடைகளால் சுரண்டப்பட்டு விடுகின்றன. தங்கள் வருமானத்தின் பெரும்பங்கை டாஸ்மாக் கடைகளில் தொலைத்து விடுவதால் பெற்றோர்களுக்கும், மனைவி மக்களுக்கும் நல்ல துணிமணி எடுத்துக் கொடுக்க முடிவதில்லை; குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்கவும் முடிவதில்லை. குடும்பத்தின் 90 சதவிகித வருவாய் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளின் மூலமே உறிஞ்சி எடுக்கப்பட்டுவிடுகிறது. அதனால் குடும்பத்தின் வருவாயும் குறைகிறது; சராசரி தமிழக வருவாயும் மிகக் குறைகிறது. குஜராத்தைப் போல தமிழ்நாட்டினுடைய தனிநபர் வருமானம் ஏன் உயரவில்லை? என்றால் ’இது திராவிட மாடல்’ என்று சப்பைக்கட்டுக் கட்டுகிறார் பழனிவேல் தியாகராஜன்.

ஒரு உழைப்பாளி சம்பாதிக்கும் உழைப்பில் 75 சதவீதத்தை அரசாங்கமே அபகரித்துக் கொண்ட பிறகு, தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் எப்படி உயர முடியும்?இதற்காகத்தான் தேர்தல் நேரத்திலே வாக்குகளுக்கு ரூபாய் 5000, 3000, 2000 என்று பட்டவர்த்தனமாகக் கொடுக்கிறார்கள். அதற்குள்ளே என்ன விஷயம் இருக்கிறது? என்ன விஷம் இருக்கிறது? என்பதை அறியாமல் தமிழக தாய்மார்களும், அண்ணன்மார்களும் அதற்கு இரையாகிறார்கள். அப்படி அவர்களிடத்தில் கொடுக்கப்பட்ட பணம் அதிகபட்சம் 24 மணி நேரம் கூட அவர்களிடத்தில் தங்காது என்பதை புரிந்து கொள்வதற்குக் கூட அவர்களுக்கு முடிவதில்லை.நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சகட்டுமேனிக்கு அனைத்து வாக்காளர்களுக்கும் ரூ 1000 முதல் ரூ 5000 வரையிலும் வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது வாக்குகளுக்குக் கொடுத்த பணத்தை பத்து நாட்கள் கூட விட்டு வைக்க ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. இதோ மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் தொடங்கி, பிற மது பானங்களுக்கு 500 ரூபாய் வரையிலும் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் கூடுதலாக வருமானம் பெறக்கூடிய வகையில் மதுபான விலை ஏற்றத்தை அறிவித்திருக்கிறார்கள். இந்த ரூ 5000 கோடி யாருடைய பணமாக இருக்கப் போகிறது. அனைத்தும் தமிழக மக்களின் வியர்வையும், ரத்தமுமாகத்தானே இருக்க முடியும். ஆஹா என்னே விடியல்?

என்னே திராவிட மாடல்?ஒருகாலத்தில் விஷ ஊசி போட்டுக் கொள்ளையடித்ததைக் கேள்விப்பட்டிருக்கிறோம்; ரயில் பயணங்களில் மயக்க பிஸ்கட் கொடுத்துக் கொள்ளை அடித்ததைக் கேள்விப்பட்டிருக்கிறோம்; குளிர்பானங்களில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பொழுது அரசாங்கம் நடத்தக்கூடிய மதுபான கடைகள் மூலமாக ஏற்கனவே மெலிந்தும், நலிந்தும் கிடக்கக்கூடிய குடிப்பிரியர்களை முழுமையாக மயக்கிப் போட்டு தமிழ் மக்களின் வியர்வையையும், இரத்தத்தையும் உறிஞ்சுவது தானே இவர்களது நோக்கம்.கடந்த 30 வருடமாக தமிழக மக்களிடத்தில் மதுவிலக்கை அமல்படுத்தத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறோம்.

எத்தனையோ மாதங்கள் ஊர் ஊராகப் பயணம் செய்து ’சாராயம் வடிக்கமாட்டோம்; குடிக்க மாட்டோம்; விற்க மாட்டோம்’ என்று மக்களிடத்தில் சத்திய பிரமாணம் வாங்கியது உண்டு. ஒவ்வொரு மாநாட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி வருகிறோம். டாஸ்மார்க்கில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க வலியுறுத்தப்பட்டபோது கூடக் கட்சியின் கொள்கைக்கு எதிரான மது விற்பனையாளர்களுக்காக ஒரு சங்கம் அமைக்க மறுத்த காலகட்டம் உண்டு. கூட்டணியிலிருந்தபோது மது பார்களை எடுத்துத் தர கட்சி நிர்வாகிகள் வலியுறுத்திய போதும் கூட அதை முழுமையாக நிராகரித்து இருக்கிறோம். எனவே, மதுவிலக்கு என்பது நம்முடைய அரசியல் வெற்றுக் கோசம் அல்ல.

இந்த தமிழ் – பாரத தேசத்தின் ஆன்மா அழிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் தான்.எனினும், கண்முன்னாலேயே இன்றைய ஆட்சியாளர்கள் திராவிட மாடல் முத்திரை குத்திக்கொண்டு அட்டைப் பூச்சிகளைப் போல தமிழ் மக்களின் உழைப்பை ஒரு வருடத்திற்கு ஒரு கோடி அல்ல, நூறு கோடி அல்ல ரூ 5,000 கோடி கூடுதலாகச் சுரண்டுவதை நம்மால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நாங்கள் மதுவை ஒழிக்கத் தான் விலையை உயர்த்துகிறோம் என்று இதற்கும் வியாக்கியானம் கொடுப்பதற்கு தயாராகிறார்கள்.

கடந்த 25 ஆண்டு காலமாக நாக்கூசாமல் பொய்யும் புரட்டும் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், அதைத் தக்க வைத்தும் கொண்டவர்கள் மீண்டும் இதையும் நியாயப்படுத்திப் பேசுவதற்கு தயங்க மாட்டார்கள். ஆனால், மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சசிபெருமாள் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார்.

அன்றைய காலகட்டத்தில் தமிழ்நாடெங்கும் மதுவிலக்குக்கு எதிராக மக்கள் திரண்டார்கள். ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அன்று மார் தட்டினார்கள். ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆன நிலையிலும் அவர்கள் பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தால், அதற்கு நேர் எதிர் மாறாக ஆண்டொன்றுக்கு ரூபாய் 5000 கோடியை எளிய மக்களிடத்திலிருந்து உறிஞ்சும் வகையில் மதுபான விலையை உயர்த்தி இருக்கிறார்கள்.அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் மறக்கலாம், நாம் மறந்து விடக் கூடாது. அவர்கள் அன்று பேசியவற்றை மறைக்க நினைக்கலாம், அதை மறைக்கவும் விடக் கூடாது, மன்னிக்கவும் கூடாது.தமிழக சகோதர, சகோதரிகளே.!எழுந்து நில்லுங்கள்.! முழு மதுவிலக்கை அமல்படுத்த ஒன்றிணையுங்கள்.!!-

டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, Ex.MLA,நிறுவனர் – தலைவர்,புதிய தமிழகம் கட்சி.

Exit mobile version