தொழில்முனைவோரும், சொத்து உருவாக்குநர்களும் நாட்டில் நிறைந்துள்ளனர்: பிரதமர் நரேந்திர மோடி.

அசோசெம் நிறுவன வாரம் 2020 நிகழ்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் சிறப்புரையாற்றினார். `நூற்றாண்டின் அசோசெம் தொழில்முனைவோர் விருதை’ திரு. ரத்தன் டாட்டாவுக்கு பிரதமர் அளித்தார். டாடா குழுமம் சார்பாக இந்த விருதை திரு. ரத்தன் டாட்டா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தேசத்தைக் கட்டமைப்பு செய்வதில் தொழில்துறையினரின் பங்களிப்புக்காகப் பாராட்டு தெரிவித்தார். இப்போது விண்ணைத் தொடும் அளவுக்கு தொழில்துறையினருக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று கூறிய அவர், இந்த வாய்ப்பை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வரக்கூடிய ஆண்டுகளில் தற்சார்பு இந்தியாவை உருவாக்க உங்களின் முழு சக்தியையும் பயன்படுத்துங்கள் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இப்போது கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில்முனைவோர் மற்றும் சொத்து உருவாக்குநர்கள் நாட்டில் நிறைந்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார். செயல்திறன் மிக்க, சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகளை உருவாக்க அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பெண்களுக்கும், இளம் திறமையாளர்களுக்கும் அதிக வாய்ப்புகள் அளித்தல், உலக அளவில் உள்ள சிறந்த நடைமுறைகளை வேகமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல், கார்ப்பரேட் நிர்வாகம் மற்றும் இலாபத்தைப் பகிர்தல் போன்ற சீர்திருத்தங்களை தொழில்துறையில் உருவாக்கி, இதன் பயன்கள் கடைசி நிலையில் உள்ள மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

பெருந்தொற்று காலத்திலும், உலகம் முழுக்க முதலீட்டுக்குப் பிரச்சினைகள் இருந்த நிலையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீது தொழில்துறையினர் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக நேரடி அந்நிய முதலீடு மற்றும் பி.எப்.ஐ. மூலம் சாதனை அளவாக அதிகபட்ச முதலீடுகள் வந்துள்ளன என்றும் பிரதமர் தெரிவித்தார். உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீது நம்பிக்கை அதிகரித்திருப்பதைப் போல, உள்நாட்டு முதலீடுகளையும் தொழில்துறையினர் அதிகரிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அமெரிக்காவில் 70 சதவீத முதலீடு செய்யப்படும் நிலையில், இந்தியாவில் இதற்கான முதலீடு குறைவாக உள்ளது என்று அவர் வருத்தம் தெரிவித்தார். வேளாண்மை, பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, கட்டுமானம், மருந்துகள், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியத் தொழில் துறையினர் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு துறையிலும், எல்லா நிறுவனங்களும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு, குறிப்பிட்ட அளவு தொகையை ஒதுக்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

உலகம் நான்காவது தொழில்புரட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய தொழில்நுட்பம் என்ற ரூபத்தில் சவால்கள் வரும், அதற்கான தீர்வுகளும் வரும் என்று பிரதமர் கூறினார். திட்டமிடுதல் மற்றும் செயல்படுதலுக்கு  இதுதான் சரியான தருணம் என்றார் அவர். தொழில்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று கூடி, தேசத்தைக் கட்டமைக்கும் பெரிய இலக்கை நோக்கிய பயணத்தில் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தியா சுதந்திரம் பெற்று நூறாண்டை எட்டுவதற்கு இன்னும் உள்ள 27 ஆண்டுகள், உலக அளவில் இந்தியாவின் பங்களிப்பை நிர்ணயிப்பதாக மட்டுமின்றி, இந்தியர்களின் கனவு மற்றும் அர்ப்பணிப்பைப் பரிசோதிப்பதாகவும் இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்தியத் தொழில்துறையின் திறன், உறுதி மற்றும் தைரியத்தை உலகிற்குக் காட்ட வேண்டிய காலமாக இது உள்ளது என்று அவர் கூறினார். தற்சார்பு நிலையை எட்ட வேண்டும் என்பது மட்டுமின்றி, எவ்வளவு சீக்கிரமாக இதை எட்டுகிறோம் என்பதும் முக்கியம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வெற்றிக்கான வாய்ப்பு குறித்து முன்பு இந்த அளவுக்கு ஆக்கபூர்வமான நம்பிக்கை ஒருபோதும் இருந்தது கிடையாது என்றும் அவர் கூறினார். முன் எப்போதும் இல்லாத இந்த அளவுக்கான நம்பிக்கை ஏற்படுவதற்கு 130 கோடி இந்தியர்கள் தான் காரணம் என்றார் அவர். புதிய சக்தியுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு, புதிய வாய்ப்புகளை இப்போது இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கிறது. தொழில்துறையினரின்  முதலீட்டில் `இந்தியாவில் எதற்காக’ என்றிருந்த மனநிலை இப்போது `இந்தியாவில் ஏன் செய்யக் கூடாது’ என்ற வகையில் மாறிவிட்டது என்றார் அவர்.

தன்னுடைய பலம், ஆதார வளங்களின் மீது நம்பிக்கை கொண்டு, தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி புதிய இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது, இந்த இலக்கை எட்டுவதற்கு உற்பத்தித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்றும் பிரதமர் கூறினார். இந்தியாவில் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதற்கு தொடர்ந்து சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் வசதியை உலக அளவிலானதாக ஆக்குவதற்கு இலட்சிய நோக்கில் நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், பூகோள ரீதியிலான அரசியல் மாறுபாடுகளுக்கும் நாம் எதிர்வினை ஆற்ற வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். உலக அளவிலான வழங்கல் தொடரில் திடீரென எழக்கூடிய எந்தத் தேவையையும் இந்தியா எப்படிப் பூர்த்தி செய்யும் என்பதற்காக செயல்திறன் மிக்க ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். இலக்கை அடைவதற்கு, அசோசெம் போன்ற தொழில் அமைப்புகள் வெளியுறவுத்துறை அமைச்சகம், வணிகம் மற்றும்  வர்த்தக அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். உலக அளவில் நிலைமாற்றங்கள் ஏற்படும் போது நாம் எப்படி விரைவாகச் செயல்பட வேண்டும், வேகமான செயல்பாட்டுக்கு நமது நடைமுறைகளை எப்படி ஆயத்தப்படுத்த வேண்டும் என்பது குறித்து தொழில்துறையினர் ஆலோசனைகள் கூற வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுடன், உலக நாடுகளுக்கும் உதவக்கூடிய திறன் இந்தியாவுக்கு உள்ளது. கொரோனா காலத்திலும், உலக நாடுகளின் மருந்துத் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்துள்ளது. அத்தியாவசிய மருந்துகளை மற்ற நாடுகளுக்கு அளித்துள்ளது. தடுப்பு மருந்துகள் விஷயத்திலும், பல நாடுகளின் எதிர்பார்ப்புகளை இந்தியா பூர்த்தி செய்யும் என்று பிரதமர் கூறினார்.  கிராமப்புறக் கைவினைஞர்களின் பொருள்களைக் காட்சிப்படுத்த உலக அளவிலான ஒரு களத்தை உருவாக்கித் தர வேண்டும் என்று அசோசெம் உறுப்பினர்களை அவர் கேட்டுக் கொண்டார். இதனால் கிராமப்புறத்துக்கும், நகர்ப்புறத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி அகற்றப்படும் என்றார் அவர். நம்முடைய இயற்கை விவசாய விளை பொருள்கள், நல்ல கட்டமைப்பு வசதிகள், நல்ல சந்தை வசதிகளை ஊக்குவிப்பதற்கு, மாநில அரசுகள், வேளாண் அமைப்புகள் மற்றும் தொழில்துறை சங்கங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் நமது கிராமப்புறப் பொருளாதாரம் புதிய உச்சத்தைத் தொடும் என்றும் அவர் கூறினார்.

21வது நூற்றாண்டின் தொடக்கத்தில் நெடுஞ்சாலைகள் மூலம் இந்தியாவில் தொடர்பை ஏற்படுத்துவதை அடல் ஜி நோக்கமாகக் கொண்டிருந்தார் என்று அவர் நினைவு கூர்ந்தார். இன்றைக்கு நாட்டில் இயல்புக் கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் வசதிகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. எல்லா கிராமங்களுக்கும் அகன்ற அலைக்கற்றை இணைய இணைப்பு வசதி அளிக்கும் முயற்சியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். கிராமப்புற விவசாயிகள் மின்னணு வசதி மூலம் உலகச் சந்தைகளை நாடும் வசதி இதன் மூலம் கிடைக்கும் என்று அவர் கூறினார். நல்ல கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கான நிதிக்கு அனைத்து வாய்ப்புகளையும், அதாவது பொதுத்துறை வங்கிகளைப் பலப்படுத்துதல், பங்குப் பத்திரச் சந்தைகளின் திறனை அதிகரித்தல் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அதே போல, இறையாண்மை சொத்து நிதிகள், ஓய்வூதிய நிதிகளுக்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. REIT-கள் மற்றும் INVIT-களுக்கு ஊக்கம் தரப்படுகிறது. கட்டமைப்பு தொடர்பான சொத்துக்களுக்கு பணம் தரப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

தேவையான வசதிகளை அரசு அளிக்கும், சரியான சூழலை உருவாக்கித் தரும், ஊக்கத் தொகைகள் வழங்கும், கொள்கைகளை மாற்றி அமைக்கும். ஆனால் தொழில்துறைப் பங்காளர்கள் தான் இதைப் பயன்படுத்தி வெற்றியை ஈட்டித் தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தற்சார்பு இ்தியா என்ற கனவு நிறைவேற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது, அதில் நாடு உறுதியாக இருக்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

Exit mobile version