மனதின் குரல் 2.0’, 10ஆவது பகுதியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் .

எனதருமை நாட்டுமக்களே, பொதுவாக மனதின் குரலில் நான் பல விஷயங்களை உங்களுக்காகக் கொண்டு வந்து தருவேன்.  ஆனால் இன்றோ, நாட்டிலும் சரி, உலகில் உள்ளோர் மனங்களிலும் சரி, ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் வியாபித்து இருக்கிறது – அது கரோனா உலகளாவிய பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பயங்கரமான பிரச்சனை.  இந்த நிலையில், நான் வேறு விஷயங்களைப் பற்றிப் பேசினேன் என்று சொன்னால் அது உசிதமாக இருக்காது.  மிகவும் மகத்துவமான விஷயங்கள் குறித்துப் பேச விழைகிறேன், ஆனால் இன்று இந்த பெருந்தொற்று பீடித்திருக்கும் வேளையில் இது தொடர்பான விஷயங்களைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது.  முதற்கண் நான் என் நாட்டுமக்கள் அனைவரிடத்திலும் மன்னிப்புக் கோருகிறேன்.  நீங்கள் அனைவரும் என்னைக் கண்டிப்பாக மன்னிப்பீர்கள் என்று என் ஆன்மா உறுதிபடத் தெரிவிக்கிறது; ஏனென்றால் எடுக்கப்பட்டிருக்கும் சில முடிவுகளால் உங்களுக்குப் பலவிதமான சிரமங்கள் ஏற்பட்டிருக்கின்றன, அதிலும் குறிப்பாக எனது ஏழை சகோதர சகோதரிகளைப் பார்க்கும் போது, ’இவர் என்ன பிரதம மந்திரி, நம்மையெல்லாம் இப்படிப்பட்ட சங்கடத்தில் ஆழ்த்தி விட்டாரே, என்று உங்களுக்குத் தோன்றலாம்.  உங்களிடத்தில் நான் விசேஷமான மன்னிப்பை வேண்டுகிறேன்.  பலர் என்னிடத்தில் கோபமாக இருக்கலாம், இப்படி வீட்டிற்குள்ளேயே அவர்களை அடைத்து வைத்திருப்பது போல வைத்திருக்கிறேனே என்று வருத்தம் இருக்கலாம்.  உங்கள் சங்கடங்கள் எனக்குப் புரிகின்றன, உங்கள் சிரமங்கள் எனக்குத் தெரிகின்றன ஆனால், பாரதம் போன்ற 130 கோடி மக்கள் கொண்ட தேசம் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராட வேண்டுமென்றால் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.  கொரோனாவுக்கு எதிரான போர் என்பது, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே நடைபெறும் போர்; இந்தப் போரில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதாலேயே இத்தகைய தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.  யாருமே மனம் ஒப்பி இத்தகைய கடினமான முடிவுகளை எடுக்கவில்லை ஆனால், உலகின் நிலையைப் பார்க்கும் வேளையில் இந்த ஒரு வழிதான் மிஞ்சியது.  உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.  உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசௌகரியங்கள், கடினங்கள் ஆகியவற்றுக்காக மீண்டும் ஒருமுறை நான் உங்களிடத்தில் மன்னிப்புக் கோருகிறேன்.  நண்பர்களே, ‘एवं एवं विकारः, अपी तरुन्हा साध्यते सुखं’ ”ஏவம் ஏவம் விகார:, அபி தருன்ஹா சாத்யதே சுகம்”, அதாவது,நோயையும் அதன் பரவலையும் தொடக்கத்திலேயே எதிர்கொள்ள வேண்டும் என்பதே இதன் பொருள்.  பின்னர் நோய் கட்டுப்படுத்த இயலாத நிலையில், இதற்கான சிகிச்சை கடினமானதாகி விடும்.  இன்று இந்தியா முழுவதிலும், ஒவ்வொரு இந்தியரும் இதைத் தான் புரிந்து வருகிறார்கள்.  சகோதர சகோதரிகளே, தாய்மார்களே, பெரியோர்களே, கரோனா வைரஸானது உலகையே கைது செய்திருக்கிறது.  இது அறிவுடையோர், விஞ்ஞானிகள், ஏழைகள், பணக்காரர்கள், பலவீனமானோர், சக்தி படைத்தோர் என அனைவருக்கும் சவாலாக உருவெடுத்திருக்கிறது.  நாடுகளைப் பிரிக்கும் எல்லைகளுக்கு எல்லாம் இது கட்டுப்படுவதும் இல்லை, பிராந்தியம் பார்த்துப் பீடிப்பதும் இல்லை, தட்பவெப்பம் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை.  இந்த வைரஸ் கிருமியானது மனிதனை உருக்குலைத்து, அவனுக்கு முடிவு கட்டுவது ஒன்றிலேயே குறியாக இருக்கிறது என்பதால், அனைவரும், ஒட்டுமொத்த மனித சமுதாயமும் இந்த வைரஸ் கிருமிக்கு ஒரு முடிவுகட்ட, ஒன்றிணைந்து உறுதி கொள்ள வேண்டும்.  தாங்கள் முழு ஊரடங்கைப் பின்பற்றி வருவதால், மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பதாகச் சிலர் கருதலாம்.  ஐயா, தயவு செய்து இப்படிப்பட்ட பிரமை இருந்தால், இதை தூர விலக்கி வைக்கவும்.  இந்த முழுமையான ஊரடங்கு உங்களை உங்களிடமிருந்து காப்பாற்ற, உங்களைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்ற, உங்கள் குடும்பத்தாரைக் காப்பாற்ற.  இனிவரும் பல நாட்களுக்கு நீங்கள் இதே போன்ற பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும், இலக்குவன் கிழித்த கோட்டைக் கடக்காமல் இருக்க வேண்டும்.  நண்பர்களே, யாருமே சட்டத்தை உடைக்க விரும்பவில்லை, விதிமுறைகளைத் தகர்க்க விரும்பவில்லை என்பதை நானறிவேன்; ஆனால் ஏன் சிலர் இப்படிச் செய்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இன்னும் நிலைமையின் தீவிரம் பற்றி புரியவில்லை.  இப்படிப்பட்டவர்களிடம் நான் கூற விரும்புவதெல்லாம், முழு ஊரடங்கின் விதிமுறைகளை நீங்கள் தகர்த்தீர்கள் என்று சொன்னால், கொரோனாவிடமிருந்து தப்புவது இயலாத காரியமாகி விடும்.  உலகிலே பலரிடம் இத்தகைய தவறான கற்பனை இருந்தது.  இன்று அப்படிப்பட்டவர்கள் எல்லோரும் கழிவிரக்கத்தில் காலம் கழிக்கிறார்கள்.

நண்பர்களே, ‘आर्योग्यम परं भागय्म स्वास्थ्यं सर्वार्थ साधनं’ ‘ஆரோக்கியம் பரம் பாக்யம் ஸ்வாஸ்த்யம் சர்வார்த்த சாதனம்’ என்று ஒரு பொன்மொழி வழக்கில் உண்டு; அதாவது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதே இதன் பொருள்.  உலகிலே அனைத்து சுகங்களைத்தரும் ஒரே வழி என்றால் அது உடல்நலம் தான்.  இத்தகைய சூழ்நிலையில் விதிமுறைகளைத் தகர்ப்பதால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறீர்கள்.  நண்பர்களே, இந்தப் போரில் பல வீரர்கள் வீட்டில் இருந்தபடி அல்லாமல், தங்கள் வீடுகளுக்கு வெளியே இந்த வைரஸ் கிருமியோடு போராடி வருகிறார்கள்.  சிறப்பாக நமது செவிலித் தாய்மார்கள், இப்படிப்பட்ட செவிலியர் பணியில் ஈடுபடும் நமது சகோதரர்கள், மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகிய இவர்கள் தாம் நமது முன்னணி வீரர்கள்.  இத்தகைய நமது நண்பர்கள் கரோனாவைத் தோற்றோடச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இன்று நாம் அவர்களிடமிருந்து உத்வேகம் அடைய வேண்டும்.  கடந்த நாட்களில் அப்படிப்பட்ட சிலரோடு தொலைபேசி வாயிலாக உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, அவர்களுக்கு நான் ஊக்கமளித்தேன், அவர்களுடன் உரையாடியதில் எனக்கும் ஊக்கம் உண்டானது.  அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.  இந்த முறை அப்படிப்பட்ட நண்பர்களுடைய அனுபவங்கள், அவர்களுடனான உரையாடல் ஆகியவற்றிலிருந்து சிலவற்றை இந்த முறை மனதின் குரலில் உங்களோடு பகிர வேண்டும் என்று நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்.

Exit mobile version