பல்கலை.யில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்: துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, கடந்த செப்.18-ம்தேதி பதவியேற்றார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பும் ஆளுநர் வசமுள்ளது. அதன்படி அனைத்து பல்கலை.களின் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடல்கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது.

ஆளுநர் ஆர்.என்.ரவிதலைமையில் நடந்த இக் கூட்டத்தில் உயர்கல்வித் துறையின்கீழ்உள்ள பல்கலை.களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அனைத்து துணைவேந்தர்களும், தங்கள் பல்கலை. செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆளுநருக்கு விளக்கம்அளித்தனர்.

அதைத்தொடர்ந்து மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி செயல்படுதல் சார்ந்துபல்வேறு அறிவுறுத்தல்களை துணைவேந்தர்களுக்கு, ஆளுநர் ரவி வழங்கியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘அனைத்து பல்கலைக்கழகங்களும் தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஆசிரியர், பணியாளர் நியமனங்களை முறைகேடு இல்லாமல் தகுதிஅடிப்படையில் நடத்த வேண்டும். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பல்வேறு சிறந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பல்கலைக்கழகங்களில் படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆய்வுபணிகளை ஊக்குவித்தல் என்பனஉட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தமிழகஅரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

இதற்கிடையே, தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த முடியாது என்றும், மாநில கல்விக்கொள்கை புதிதாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version