6 நகரங்களுக்கு 5 நட்சத்திர தகுதி, 65 நகரங்களுக்கு 3 நட்சத்திர தகுதி, 70 நகரங்களுக்கு ஒரு நட்சத்திர தகுதி.

2019-20-ம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, குப்பைகள் இல்லா நகரங்களின் நட்சத்திர தகுதிப் பட்டியலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி இன்று நிகழ்ச்சி ஒன்றில், வெளியிட்டார். மொத்தம் 6 நகரங்கள் ( அம்பிகாபூர், ராஜ்கோட், சூரத், மைசூரு, இந்தூர், நவி மும்பை) 5 நட்சத்திர தகுதியைப் பெற்றுள்ளதாகவும், 65 நகரங்கள் 3 நட்சத்திர தகுதியும், 70 நகரங்கள் ஒரு நட்சத்திரத் தகுதியும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை அறிவித்த நிலையில், குப்பை இல்லா நகரங்களின் நட்சத்திர தகுதிக்கான திருத்தப்பட்ட விதிமுறைகளையும் அவர் வெளியிட்டார். நகரங்களில் குப்பை இல்லாத நிலையைப் பராமரிக்கவும், சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருப்பதில் உயர் தரத்தை அடைவதை ஊக்குவிக்கவும் 2018 ஜனவரி மாதம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் இந்த தர மதிப்பீட்டுத் திட்டத்தை தொடங்கியது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலர் திரு. துர்கா சங்கர் மிஸ்ரா மற்றும் உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘’ கொவிட்-19 நெருக்கடி நிலை நிலவும் சூழ்நிலையில், சுகாதாரம் மற்றும் செயல்திறன் மிக்க திடக்கழிவு மேலாண்மை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக தற்போது முன்னணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நகர்ப்புறப் பகுதிகளில் உயர்தரத்திலான சுகாதாரம் மற்றும் துப்புரவு நிலையை உறுதி செய்வதில்  தூய்மை இந்தியா நகர்ப்புற இயக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளில் முக்கியப் பங்காற்றியிராவிட்டால், தற்போதைய நிலை மிகவும் மோசமாக மாறியிருக்கும் என்று சொல்வது மிகையாகாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் நகர்ப்புறப் பகுதிகளில் வருடாந்திர தூய்மை ஆய்வுக்கான சுவாச் சர்வேஷன் என்னும் திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். நகரங்களுக்கிடையே தூய்மையைப் பராமரிப்பதில் ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு, இத்திட்டம் பெரும் வெற்றி பெற்றிருப்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இருப்பினும் , மேற்கொள்ளப்பட்ட தர மதிப்பீட்டு முறையின்படி, சிறப்பாகச் செயல்பட்டபோதிலும் பல நகரங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத நிலை நிலவுகிறது. எனவே, குப்பை இல்லா நகரங்களுக்கான நட்சத்திர தர நிர்ணய விதிமுறைகளை அமைச்சகம் வடிவமைத்தது. இதன்படி, தேர்வுகளில் மதிப்பெண்களை பெறுவது போல, திடக்கழிவு மேலாண்மையில் 24 வகையான அம்சங்களில், நகரத்தின் ஒவ்வொரு வார்டும் சில தர மதிப்பீடுகளை நிறைவு செய்யக்கூடிய விரிவான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நகரங்கள் பெறும் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் நட்சத்திரத் தகுதி வழங்கப்படுகிறது’’ என்று கூறினார்.

அண்மையில் நடைபெற்ற நட்சத்திர தர மதிப்பீட்டிற்கு 1435 நகரங்கள் விண்ணப்பித்திருந்தன. மதிப்பீட்டின் போது, 1.19 கோடி மக்களின் ஆலோசனைகள், 10 லட்சத்துக்கும் அதிகமான புவி குறிச்சொல் படங்கள் திரட்டப்பட்டன. 5175 திடக்கழிவு மேலாண்மை நிலையங்களை 1210 கள மதிப்பீட்டாளர்கள் ஆய்வு செய்தனர். 698 நகரங்கள் மதிப்பீட்டுக்கு தேர்வு செய்யப்பட்டு, கள மதிப்பீட்டின்படி, 141 நகரங்களுக்கு நட்சந்திர அந்தஸ்து தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நெருக்கடி நிலவும் இத்தருணத்தில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு பொது இடங்களில் சிறப்பு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலிருந்து உயிரி மருத்துவக் கழிவுகளை சேகரித்து அகற்றவும், விரிவான  கூடுதல் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Exit mobile version