இந்தியாவின் எல்லை கோட்டில் கொங்கு தமிழச்சி வானதி ! மரத்துக்கு அந்தப்பக்கம் பாகிஸ்தான் இந்த பக்கம் இந்தியா!

ஜம்மு காஷ்மீர் பாஜக மகளிரணி மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்மு – காஷ்மீர் வந்திருக்கிறேன்.செயற்குழு கூட்டம் முடிந்ததும் நேற்று (10-7-2021) மாலை நான் பிறந்த கோவையில் இருந்து சுமார் 3,100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள சுசேத்கர் எல்லைக்கு சென்றிருந்தேன். அந்தப் படங்களை இங்கே இணைத்திருக்கிறேன்.

தேசப்பிரிவினைக்கு முன்பு சுசேத்கர், பாரதத்தின் மற்ற மாநிலங்களில் உள்ள ஒரு ஊரைப் போல அமைதியான ஒரு ஊராகவே இருந்திருக்கிறது. அங்கு ஒரு ரயில் நிலையம் இருக்கிறது. ரத்தம் சொட்ட சொட்ட பாரத தேசம் பிரிக்கப்பட்ட பிறகு சுசேத்கர் இந்திய – பாகிஸ்தான் எல்லைக்கோடானது. அங்குள்ள எல்லைக் கல், இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கும் கொடிக் கம்பம், இன்று எல்லைப் பாதுகாப்பு படையின் முகாமாக மாறியுள்ள சுசேத்கர் ரயில் நிலையம் ஆகியவற்றின் முன்பு ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு படம் எடுத்துக் கொண்டேன்.ஆனால் இந்த இடம் 1947-ல் சுதந்திரம் அடைந்தபோது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்தபோது மனம் கனத்தது.

சுசேத்கரில் நீண்டு வளர்ந்த மரம் ஒன்று இருக்கிறது. அதற்கு முன்பு நானும் என்னுடன் வந்த மகளிரணி நிர்வாகிகளும் படம் எடுத்துக் கொண்டோம். அந்த மரத்தின் ஒரு பாதி இந்தியாவுக்கும், மற்றொரு பாதி பாகிஸ்தானுக்கும் சொந்தமானது என்று அங்குள்ளவர்கள் சொன்னதும் என் ஆர்வம் அதிகமானது. அதைப் பற்றி மேலும் சில தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டேன்.மரத்தின் இரு பக்கமும் சிமெண்ட் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை இருநாட்டு ராணுவத்தின் கூட்டுக் கூட்டம் நடைபெறும். ஒரு முறை இந்தியாவுக்கு சொந்தமான சிமெண்ட் மேடையிலும், மறுமுறை பாகிஸ்தானுக்கு சொந்தமான சிமெண்ட் மேடையிலும் இந்த கூட்டு கூட்டம் நடைபெறும் என்றும் சொன்னார்கள்.

தேசபிரிவினையின் சோக வரலாற்றுக்கு சாட்சியாக நிற்கும் மரத்துக்கு அந்தப் பக்கம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் மாவட்டம் உள்ளது. பிரிவினையின் போது அந்த மாவட்டத்தில் 23 சதவீத இந்துக்கள் இருந்துள்ளனர் என்று ஆவணங்கள் கூறுகின்றன.ஆனால் இன்று வெறும் 2 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள். அப்படியெனில் அவர்கள் என்ன ஆனார்கள்? இந்த வரலாற்றை மறைக்கத்தான் பல அரசியல் கட்சிகள் ‘மதச்சார்பின்மை’ வேடம் தரித்துள்ளனர்.

தேசப் பிரிவினைக்கு ஒப்புக் கொண்ட சிலரின் முடிவால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்று கொல்லப்பட்டார்கள். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டார்கள். எங்கும் ரத்த ஆறு ஓடியது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த வீடு, நிலம், சொத்துக்களை எல்லாம் ஒரே இரவில் பறிகொடுத்துவிட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு அகதிகளாக அவர்கள் தஞ்சம் அடைய நேர்ந்தது. இந்த தேசப் பிரிவினையின் சோக வரலாறுகளை எல்லாம் நான் கல்லூரி மாணவியாக இருந்த போதே படித்திருக்கிறேன். அந்த நினைவுகள் எல்லாம் என் மனதில் நிழலாடி பெரும் துக்கத்தை கொடுத்தது. இந்தியாவின் தென்கோடி மாநிலம் என்பதால் தேசப் பிரிவினையின் போது நடந்த கொடூரங்கள் நமக்கு தெரியவில்லை. ஆனால் அவற்றை நேரில் காணும் போது உடலில் ஒரு அங்கத்தை வெட்டி எறிந்தது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

அந்தத் துயரங்களுக்கு எல்லாம் முடிவு கட்டி, ஜம்மு காஷ்மீரை மற்ற மாநிலங்களைப் போல ஒரு அங்கமாக மாற்றுவதற்காக அம்மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் அங்கு அமைதி திரும்பிக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீரும் மாறும். மற்ற மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வது போல நாமும் இனி ஜம்மு காஷ்மீர் செல்லலாம். அந்த நிலையை நோக்கி காஷ்மீர் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பது அந்த துயரத்திலும். மகிழ்ச்சியை தந்தது.

https://www.facebook.com/VanathiBJP/photos/pcb.4131445570274345/4131444870274415/

Exit mobile version