விடியா திமுக ஆட்சி பரிதாபங்கள் ! கலெக்டரை மிரட்டிய தி.மு.க. எம்.பி .!

SenthilBalaji-DMK

SenthilBalaji-DMK

பொதுமக்கள், சபாநாயகர், அமைச்சர் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே, வெடிவிபத்து நடந்த கல்குவாரி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்துக்குச் சொந்தமானதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

நெல்லை மாவட்டம் பென்னாக்குடி அருகேயுள்ள அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் தனியார் கல் குவாரி இயங்கி வந்தது. இந்த குவாரி தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய புள்ளியின் பினாமி பெயரில் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குவாரியில் பாறைகளை வெடிவைத்து தகர்த்து வந்தனர். அந்த வகையில், கடந்த மே 15-ம் தேதி வெடிவைக்கப்பட்ட நிலையில், சிதறிய பாறைத்துண்டுகளை அள்ளும் பணி நடந்தது. இரவு நேரத்திலும் வேலை தொடர்ந்த நிலையில், திடீரென கல்குவாரியின் மேலே இருந்த பாறைகள் சரிந்து விழுந்தன. இதில், பாறை கழிவுகளை ஏற்றிக் கொண்டிருந்த பொக்லைன் வாகனம், டிப்பர் லாரிகள், 6 பணியாளர்கள் பாறை இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இந்த அசம்பாவிதத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரிகளிலும் கலெக்டர் விஷ்ணு அதிரடி சோதனை நடத்தினார். அப்போது, மாவட்டத்தில் மொத்தமுள்ள 41 கல்குவாரிகளில் ஒன்று மட்டுமே அனுமதி பெற்று முறைப்படி இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து, இதர 40 குவாரிகளுக்கும் சீல் வைத்தார் கலெக்டர் விஷ்ணு. இதனால், லோக்கல் தி.மு.க.வினர் கலெக்டர் மீது கடும் அதிருப்தி பிளஸ் ஆத்திரத்தில் இருந்தனர். ஆனால், சரியான சந்தர்ப்பம் கிடைக்காததால் செய்வதறியாது கையை பிசைந்து வந்தனர். இந்த சூழலில்தான், அரசு நிகழ்ச்சி ஒன்றில் ஒரு நிருபரை கேள்வி கேட்க வைத்து கலெக்டரை காய்ச்சி எடுத்திருக்கிறார் தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம்.

அதாவது, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் தொழிற்பயிற்சி தொடக்க விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. இவ்விழாவில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கணேசன், எம்.பி. ஞானதிரவியம், கலெக்டர் விஷ்ணு மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டம் நிறைவடைந்த நிலையில், செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது. ஒரு நிருபர் நெல்லை கல்குவாரி சீல் வைப்பு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். தானாகவே கேள்வி எழுப்பினாரா அல்லது ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளால் கேள்வி எழுப்பும்படி அறிவுறுத்தப்பட்டாரா என்பது தெரியவில்லை. இதற்கு இந்தக் கூட்டத்தில் வேண்டாம், தனிப்பட்ட முறையில் பதிலளிக்கிறேன் என்று கலெக்டர் பதிலளித்தார்.

ஆனால், விடாத தி.மு.க. எம்.பி. ஞானதிரவியமோ, இப்போதே பதில் சொல்லியாக வேண்டும். கடந்த இரண்டு மூன்று மாதமாக தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகிறார்கள் என்று ஆவேசமானார். அவரை அமைச்சர் கணேசன் சமாதானப்படுத்த முயன்றபோதும், சமாதானமடையாத எம்.பி. ஞானதிரவியம், சபாநாயகர், அமைச்சர், பொதுமக்கள் முன்னிலையில் கலெக்டரிடம் எகிறுகிறார். இதைப் பார்த்த பொதுமக்களும், நிருபர்களும், எம்.பி. ஞானதிரவியம் இவ்வளவு ஆவேசமடைகிறார் என்றால், நெல்லை மாவட்டத்தில் விபத்துக்குள்ளான குவாரி உட்பட பல்வேறு குவாரிகள் ஞானதிரவியத்தின் குவாரிகளாக இருக்குமோ என்று சந்தேகம் கிளப்புகிறார்கள்.

தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று முன்தினம் உதவி கோரி மனு கொடுக்க வந்த பெண்ணை தலையில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் கலெக்டருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Exit mobile version