உ.பி.,யில் யோகி அரசு அதிரடி ! தாதாக்களுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்க அதிரடி திட்டம் !

உத்தர பிரதேசத்தில், தலைமறைவாகி உள்ள தாதாக்களை தேடி வருவதாகவும், ஜாமினில் வெளியில் உள்ள தாதாக்களை கண்காணித்து வருவதாகவும் அம்மாநில காவல் துறை தெரிவித்து உள்ளது.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, மாநில அரசு தாதாக்களை ஒடுக்குவதில், தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.’உ.பி.,யில் எந்த மூலையில் ரவுடிகள் இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் படி ஒடுக்கப்படுவர்’ என, சமீபத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், உ.பி., யில் முக்கியமான, 66 தாதாக்கள் அடங்கிய பட்டியலை அம்மாநில காவல் துறை சமீபத்தில் வெளியிட்டது. இதில், மூன்று பேர் உயிரிழந்து உள்ளனர்.அனில் துஜானா, ஆதித்யா ராணா ஆகியோர், சமீபத்தில் போலீஸ் ‘என்கவுன்டரில்’ சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சமாஜ்வாதி முன்னாள் எம்.பி.,யும், தாதாவுமான அட்டிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரபை, மூன்று பேர் அடங்கிய கும்பல், பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனையில் சுட்டுக் கொன்றது. இதில், அஷ்ரப் பெயர் தாதாக்கள் பட்டியலில் இல்லை.

இது குறித்து, போலீசார் கூறியதாவது:உ.பி.,யில், முக்கிய 66 தாதாக்களில், மூன்று பேர் உயிரிழந்து விட்டனர்.மீதமுள்ள 63 பேரில், ஐந்து பேர் தலைமறைவாகி உள்ளனர்; 20 பேர் ஜாமினில் வெளியில் உள்ளனர். மேலும், 38 பேர் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஜாமினில் வெளியில் உள்ள தாதாக்களின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து வருகிறோம். தலைமறைவாக உள்ள தாதாக்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.சரணடைவதற்கு பதில், எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், தாதாக்கள் நிச்சயமாக பதிலடியை எதிர் கொள்வர்.

முன்பு, சிறையில் இருந்தபடி, தாதாக்கள் தங்களது நெட்வொர்க்கை நடத்தினர்.தற்போது, சிறை அதிகாரிகளுக்கும், தாதாக்களுக்கும் இடையேயான தொடர்பு ஒடுக்கப்பட்ட பின், அவர்களது ஆட்டம் அடங்கி உள்ளது.மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கே எங்களுக்கு மிக முக்கியம். இதில் விளையாட நினைப்பவர்களுக்கு அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Exit mobile version