உலகம் முழுவதும் பரவிவருத் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான மருந்துப் பொருட்களுக்கு நமது நாட்டில் தட்டுப்பாடு ஏதுமில்லை என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் தொடர்பான மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசிய அவர், கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக, இந்தியாவில் இந்நோய் பரவாமல் கட்டுப்படுத்துவதில் அரசு வெற்றி பெற்றிருப்பதாகக் கூறினார்.
இந்நோய் மருந்து தயாரிப்புத் துறையினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதேவேளையில், இத்துறையினருக்கு பெரும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகக் கூறினார்.
அரசு, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், மருந்து தயாரிப்புத் துறையினர் முழு அளவிலான ஆயத்த நிலையை மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மருந்து தயாரிப்பு தொழில்துறையில் வெளிநாட்டு இறக்குமதிகளை சார்ந்திருக்கும் நிலையைக் குறைத்து, உள்நாட்டிலேயே அவற்றை உற்பத்தி செய்து, தன்னிறைவு நிலையை அடைய வேண்டியது அவசியம் என்றும் சதானந்த கவுடா குறிப்பிட்டார்.
அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பாக, மக்களிடையே அதிகரித்து வரும் விழிப்புணர்வு காரணமாக மருந்து தயாரிப்புத் தொழிலில் வாய்ப்புகள் நிறைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், 2025ஆம் ஆண்டு வாக்கில், இந்திய மருந்து தயாரிப்புத் தொழில் 100 பில்லியன் டாலர் அளவிற்கும், மருத்துவ சாதன தயாரிப்புத் தொழில் 50 பில்லியன் டாலர் அளவிற்கும் சந்தை வாய்ப்புகளைக் கொண்டிருப்பதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
எனவே, மாபெரும் மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவ சாதன தயாரிப்பு தொழில் பூங்காக்களை அமைப்பதற்கான பணிகளில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இத்தகைய தொழில் பூங்காக்களை அமைக்க தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களிலிருந்து கோரிக்கை வந்திருப்பதாகவும், இதுபோன்ற பூங்காக்களில் பொது வசதி மையங்களை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















