தமிழகத்தில் பத்திரப்பதிவு ‘டோக்கன்’ முறை: விரைவில் வருது புதிய கட்டுப்பாடு.

தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிகள், ‘ஆன்லைன்’ முறைக்கு மாறியுள்ளன. அதனால், பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விபரங்களை, அதற்கான இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்.முதலில், அடிப்படை சரிபார்ப்பு முடிந்த நிலையில், விண்ணப்பதாரரின் விருப்பம், சார் – பதிவாளரின் பணி அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டு, அதற்கான, ‘டோக்கன்’கள் வழங்கப்படும்.தற்போது, ஒவ்வொரு சார் – பதிவாளர் அலுவலகத்திலும், ஒரு நாளைக்கு, 100 முதல், 200 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.இந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஆஜரானால், உடனடியாக பத்திரப்பதிவு பணிகள் முடிந்து விடும்.

இதில், குறிப்பிட்ட நேரத்திற்கு விண்ணப்பதாரர்கள் வராதது, பணிகள் தாமதம் போன்ற காரணங்கள் ஏற்பட்டால், அந்த டோக்கன் எண், அதே நாளில் வேறு நேரத்துக்கு மாற்றப்படும்.இவ்வாறு நேரம் தவறும் டோக்கன்களுக்கு உரிய நபர்கள், ஒரே நேரத்தில் வருவதால், மாலையில் நீண்ட நேரம்பத்திரப்பதிவு நடத்தப்பட வேண்டியுள்ளது. இது, சார் – பதிவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் சிரமம் ஏற்படுத்துவதாக உள்ளது.

இதுகுறித்து, பதிவுத்துறை அலுவலர்கள் கூறியதாவது:

பத்திரப் பதிவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வரத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு, அதே நாளில், மறுமுறை நேரம் ஒதுக்குவதால், மாலையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.வெளியூரில் இருந்து பத்திரப் பதிவுக்காக வருவோர், அந்த நாளில் எப்படியாவது வேலையை முடித்து செல்ல விரும்புகின்றனர்.

இதனால், சார் – பதிவக வளாகத்தில் கூட்டமாக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அத்துடன், அங்கு பணிச்சூழலும் பாதிக்கப்படுகிறது.எனவே, அதுபோன்ற சூழலில், டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் பதிவு நடக்கவில்லை என்றால், அந்த டோக்கனை மறுமுறை பயன்படுத்த முடியாதபடி ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இதனால், தேவையின்றி மாலை வரை காத்திருக்கும் கூட்டமும் தவிர்க்கப்படும்.இது தொடர்பாக, பதிவுத் துறை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியாகும்.இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால், குறித்த நேரத்தில் பத்திரப்பதிவு செய்தாக வேண்டும் என்ற எண்ணமும், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Exit mobile version