திமுக தலைவர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் தமிழ், ஆங்கிலம் தவிர 3-வது மொழி இல்லையா எல்.முருகன் கேள்வி.

கன்னியாகுமரி எம்.பி., இடைத்தேர்தலில் பாஜக., வேட்பாளர் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவது உறுதி என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார்.


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வசந்தகுமார் காலமானார். இதனால் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பெயர் வேட்பாளராக அடிபடுகிறது. 


கன்னியாகுமரியில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக., தமிழக தலைவர் எல். முருகன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: கன்னியாகுமரியில் பாஜக விதைத்த விதை இன்று விருட்சமாக சென்னை வரை வளர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2,000 பேர் பாஜகவில் இணைந்து கொண்டு வருகின்றனர்.


திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் தமிழ், ஆங்கிலம் தவிர 3-வது மொழி எதனையும் கற்பிக்க மாட்டோம் என அறிவித்து அட்மிஷன் போட முடியுமா? கொரோனா காலத்தில் அத்தனை அரசியல் கட்சிகளும் வீட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். ஆனால் பாஜக தொண்டர்கள்தான் இன்று வரையும் மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.


கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் நடைபெறும். இந்த தொகுதியில் வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்தியில் அமைச்சராவார். ஆகையால் அனைவரும் பாஜக வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு எல். முருகன் பேசினார்.

Exit mobile version