உலகநாட்டு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து.

பூடான் மன்னருடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடல்

பூடான் மன்னர் மேதகு ஜிக்மே கேசர் நம்க்யேல் வாங்க்சக்-வுடன் பிரதமர் மோடி இன்று தொலை பேசியில் பேசினார்.

பிரதமர்  திரு. நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பூடான் மன்னர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவித்த பிரதமர், பூடான் மன்னருக்கும், முன்னாள்  மன்னர் மற்றும் அரச  குடும்ப உறுப்பினரகள் பற்றியும் நலம் விசாரித்து தனது அன்பைத் தெரிவித்தார்.

அண்டை நாடுகளாகவும், நட்பு நாடுகளாகவும் இருக்கும் இந்தியா-பூடான் இடையே நிலவும் தனிச்சிறப்பான பிணைப்பு மற்றும் நம்பிக்கை குறித்து இரு தலைவர்களும் பேசினர். இந்த சிறப்பு நட்பை வளர்ப்பதில், பூடான் மன்னர் வழிகாட்டியாக இருப்பதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

பூடானில் கொவிட்-19 நிலைமையை திறம்பட சமாளித்ததற்கு, பிரதமர் தனது பாராட்டை தெரிவித்தார். மேலும், கொவிட் நிலைமையை சமாளிக்க, பூடானுக்கு தேவையான உதவிகளை அளிப்பதற்கு, இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி உறுதியளித்தார்.

இருதரப்புக்கும் சாதகமான தேதியில், பூடான் மன்னர் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தியா வரும்படியும், பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இலங்கை அதிபர் மற்றும் பிரதமருடன் பிரதமர் தொலைபேசி உரையாடல்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிறந்த நாளான இன்று இலங்கை அதிபர் மேன்மைமிகு திரு கோத்தபய ராஜபக்ச மற்றும் இலங்கை பிரதமர் மேன்மைமிகு திரு மகிந்த ராஜபக்ச ஆகியோர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

அண்டை நாடுகளுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களது அவா மற்றும் உறுதியை இரு இலங்கை தலைவர்களும் வெளிப்படுத்தினர். கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான ஒன்றிணைந்த போர் உட்பட தொடர் இருதரப்பு ஒத்துழைப்புக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

தங்களது மனமார்ந்த வாழ்த்துகளுக்காக இரு தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையை சார்ந்து இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்த அவர்களுடன் இணைந்து பணிபுரிவதற்கு தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் – பிரதமர் திரு.நரேந்திர மோடி இடையிலான தொலை பேசி உரையாடல்

ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புடினிடம் இருந்து, பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு இன்று தொலைபேசி அழைப்பு வந்தது.

பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு, ரஷ்ய அதிபர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது நன்றி கலந்து பாராட்டை தெரிவித்தார்.

இந்தியா-ரஷ்யா இடையிலான தனிச்சிறப்பான உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டனர். கொவிட்-19 தொற்று நேரத்திலும், இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு இரு நாட்டு தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.  இந்த நேரத்திலும், இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாஸ்கோ சென்றதை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

இந்தாண்டு பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு(SCO ) ரஷ்ய அதிபர் புடின் வெற்றிகரமாக தலைமை தாங்கியதற்கு  பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.  இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு,  பிரிக்ஸ் மற்றும் இந்தியா நடத்தும் எஸ்.சி.ஓ அமைப்பின் தலைவர்கள் குழு கூட்டத்திலும்  கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவம், பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

இந்தியா-ரஷ்யா உறவை வலுப்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் உறுதியுடன் இருப்பதற்காக, அதிபர் புடினுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இருதரப்புக்கும் சாதகமான தேதியில், இந்தியாவில் அடுத்த இருதரப்பு கூட்டத்துக்கு ரஷ்ய அதிபர் திரு.விளாடிமிர் புடினை வரவேற்பதை ஆர்வமுடன் எதிர்நோக்குவதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.

Exit mobile version