போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிரான நமது இடைவிடாத வேட்டை தொடர்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் உள்துறை அமைச்சர் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“போதைப்பொருளுக்கு எதிரான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சமரசமற்ற தன்மைக்கு இணங்க, தில்லி தேசிய தலைநகரில் ஒரு பெரிய போதைப்பொருள் கட்டமைப்பு கும்பல் கண்டுபிடிக்கப்பட்டது. தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பும் தில்லி காவல்துறையும் இணைந்து அந்த கும்பலைப் பிடித்து ₹ 27.4 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன், எம்டிஎம்ஏ, கோகோயின் ஆகியவற்றை மீட்டு ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர். இந்தப் பெரிய நடவடிக்கைக்காக தேசிய போதை பொருள் தடுப்பு அமைப்பையும் தில்லி காவல்துறையையும் நான் பாராட்டுகிறேன் “.
நடவடிக்கை விவரம்:
தில்லியின் சத்தர்பூர் பகுதியில் உயர்தர மெத்தாம்பேட்டமைன் பரிமாற்றம் குறித்த ரகசிய தகவல் கிடைத்ததும், போதைப்பொருள் தடுப்பு அமைப்பும் (என்சிபி) தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவும் இணைந்து சந்தேக நபர்கள் மீது கண்காணிப்பை மேற்கொண்டன. அப்போது ₹10.2 கோடி மதிப்புள்ள 5.103 கிலோகிராம் உயர்தர கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைனை ஏற்றிச் சென்ற வாகனத்தை மறித்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. நைஜீரியாவைச் சேர்ந்த நான்கு பிரஜைகள் உட்பட வாகனத்தில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேற்கு தில்லியின் திலக் நகர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ₹16.4 கோடி மதிப்புள்ள 1.156 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன், 4.142 கிலோ ஆப்கான் ஹீரோயின், 5.776 கிலோ எம்டிஎம்ஏ (எக்ஸ்டஸி மாத்திரைகள்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கிரேட்டர் நொய்டாவில் ஒரு வாடகை குடியிருப்பில் தேடுதலின்போது 389 கிராம் ஆப்கான் ஹெராயின், 26 கிராம் கோகைன் அகியவை மீட்கப்பட்டன.
போதைப்பொருள் கும்பல்களை வெற்றிகரமாக கண்டுபிடித்து கடத்தலைத் தடுப்பதற்கான என்சிபி-யின் உறுதிப்பாட்டை இந்த பறிமுதல் எடுத்துக்காட்டுகிறது. போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போராட, என்சிபி மக்களின் ஆதரவை நாடுகிறது. தேசிய போதைப்பொருள் உதவி எண் 1933-ஐ தொடர்பு கொண்டு போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை யார் வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம் என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















