பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஊழலற்ற ஆட்சி: அமித்ஷா பெருமிதம் !

”மத்தியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி அளித்து வருகிறார்,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறினார்.இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் 94வது ஆண்டு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது.


இதில் மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பேசியதாவது:நாடு சுதந்திரம் அடைந்து ௭௫ ஆண்டு நிறைவு பெற உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாகத் தான், ஒரு ஊழல் புகார் கூட இல்லாத அரசை மக்கள் பார்த்து வருகின்றனர். சிறிதும் ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி தந்து உள்ளார்.

நாங்கள் பல முடிவுகளை எடுத்துள்ளோம். அதில் ஒன்றிரண்டு தவறாக இருக்கலாம். ஆனால், எந்த தவறான நோக்கத்திற்காகவும் எந்த முடிவும் எடுக்கப்பட்டதில்லை.மக்கள் மற்றும் நாட்டு நலனை நோக்கமாக வைத்தே அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளோம்; எடுப்போம்.

நாட்டில் 2014க்கு முன் வரை 60 கோடிக்கும் அதிகமான மக்கள் வங்கி கணக்கு, மின்சார வசதி, காஸ் இணைப்பு மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் இருந்தனர். இவர்களுக்கு இந்த வசதியை மோடி அரசு தான் ஏற்படுத்தி கொடுத்தது. இதன் வாயிலாக அவர்களுக்கும் நாட்டின் வளர்ச்சியில் நம்பிக்கை ஏற்பட்டது.பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பான தலைமை பண்பு மற்றும் 130 கோடி மக்களின் பங்களிப்பால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டை 50 ஆண்டு களுக்கு மேல் ஆட்சி செய்த கட்சி, நான்கு அல்லது ஐந்து முக்கிய முடிவுகளை தான் எடுத்தது. ஆனால், மோடி தலைமையிலான அரசு ஏழு ஆண்டுகளில் 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.இவ்வாறு அமித் ஷா பேசினார்.

Exit mobile version