‘சொந்த வாகனம் இல்லை’ – யோகி ஆதித்யநாத் சொத்து மதிப்பு ரூ.1.54 கோடி…

உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ரூ.1.54 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்பூர் நகர்ப்புறம் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

யோகி ஆதித்யநாத் தமது வேட்புமனுவில் கூறியிருப்பதாவது: ரூ.1,54,94,054 மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. 6 வங்கிக் கணக்குகள் உள்ளன. ரூ.12,000 மதிப்பிலான சாம்சங் செல்போன் உள்ளது. ரூ.1,00,000 மதிப்பிலான கைத் துப்பாக்கி, ரூ.80,000 மதிப்பிலான ரிவால்வர் ஆகியவையும் உள்ளன.

ரூ.49,000 மதிப்பிலான 20 கிராம் தங்க நகைகள் உள்ளன. தங்க செயின் உள்ளது. ஆபரணங்களைக் கொண்ட ருத்திராட்ச மாலை உள்ளது. மேலும் 2020-2021-ல் தமது ஆண்டு வருமானம் 13,20,653 என்றும் 2019-20ல் ரூ.15,68,799; 2018-19-ல் ரூ.18,27,639; 2017-18-ல் ரூ.14,38,670 ஆண்டு வருமானம் எனவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். யோகி பெயரில் எந்த விளைநிலமும் இல்லை. அதேபோல் யோகிக்கு சொந்த வாகனமும் இல்லை என அந்த வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version